பக்கம் எண் :


426


    
சிறுவீ முல்லைத் தேங்கமழ் பசுவீ 
    
பொறிவரி நன்மான் புகர்முகங் கடுப்பத் 
    
தண்புதல் அணிபெற மலர வண்பெயல் 
    
கார்வரு பருவம் என்றனர் மன்இனிப் 
5
பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர் 
    
அன்பின் மையிற் பண்பில பயிற்றும் 
    
பொய்யிடி அதிர்குரல் வாய்செத்து ஆலும் 
    
இனமயில் மடக்கணம் போல 
    
நினைமருள் வேனோ வாழியர் மழையே. 

     (சொ - ள்.) மழையே சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ நல் மான் பொறி வரி புகர் முகம் கடுப்ப - மேகமே ! நம் காதலர் தாம் வினைவயிற் பிரிந்து செல்கின்ற பொழுது இனி என்று வருவீரோ என்று யாம் வினாவியதற்கு அவர் "சிறிய பூவையுடைய முல்லையின் தேன்மணம் வீசும் பசிய மலரெல்லாம் நல்ல யானையின் புள்ளிகளையும் வரிகளையும் உடைய புகரமைந்த முகம் போல; தண் புதல் அணி பெற மலர வண் பெயல் கார்வரு பருவம் என்றனர் - மெல்லிய புதர்களில் எங்கும் அழகு பொருந்தும்படி மலராநிற்ப மிக்க மழை பெய்தலையுடைய கார்ப்பருவம் அன்றோ யாம் வரும் பருவம்" என்று கூறிச் சென்றார்; இனி அன்பு இன்மையின் பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் - அங்ஙனமாக நீ இப்பொழுது மிகுதியும் இவள்பால் அன்பில்லாமையால் இவளுடைய பிரிவினாலுண்டாகிய பெரிய துன்பம் பொருந்திய உள்ளம் நடுங்குதலைச் செய்யும் பொருட்டு; பண்பு இல பயிற்றும் பொய்இடி அதிர் குரல் - இயல்பில்லாதவற்றை மேற்கொள்ளுகின்ற பொய்ம்மையாக இடிக்கின்ற அதிர்ச்சியையுடைய நின்முழக்கத்தை; வாய் செத்து ஆலும் மயில் இனம் மடக் கணம் போல - மெய்ம்மையாகக் கொண்டு ஆரவாரிக்கின்ற மயிலினமாகிய அறிவில்லாத அக் கூட்டம்போல; நினை மருள்வேனோ - நின்னைக் கண்டவுடன் அவர் இப்பொழுது வருகுவர் என்று யானும் மயங்குவேனோ? அங்ஙனம் செய்யேன்; அவர் இயல்பாகிய கார்ப் பருவத்திலேதான் வருகுவர்; நீ வீணே முழங்காதே கொள்; வாழியர் - நீடு வாழ்வாயாக!; எ - று.

     (வி - ம்.)வாழியர் : இகழ்ச்சிக்குறிப்பு.

     கார்ப்பருவந் தொடங்கியுங் காதலர் வாராமையால் வருந்தியதலைவி தேறுதல்வேண்டி மழையைப் பொய்ம்மழையென்று மறுத்தாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியையாற்றுவித்தல்.

     (பெரு - ரை.) நன்மான் - ஈண்டு யானை. வாய் - உண்மை. மடக்கணம் - அறியாமையுடைய கூட்டம். வாய்மையுணரமாட்டாமைக்கு ஏதுக்கூறுவாள் மடக்கணம் என்றாள்.

(248)