பாதுகாத்திருப்பதையும் நீ கண்டிருக்கின்றாயன்றே? ; என் தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய - தளிர் போன்ற என்னுடம்பில் உள்ள பழைய அழகு கெடும்படி; பலிபெறு கடவுள் பேணி - அன்னையானவள், யான் வெளிப்படாதவாறு இல்வயிற் செறித்து ஆடு முதலிய பலியைப் பெற இருக்கின்ற முருகவேளை வழிபட்டு; கலிசிறந்து தொடங்கு நிலை - மாதர்குழாத்தொடு கூடி ஒலிமிக்கு வெறியெடுக்குங்காலை; பறவை உடங்கு குரல் கவரும் தோடு இடம் கோடாய் கிளர்ந்து நீடினை விளை வாழிய - யான் நின்னைக் காப்பதில்லாது கைவிட்டு விடுதலானே கிள்ளை முதலாய பறவைகள் ஒருசேர வந்து உன்னுடைய கதிர்களைக் கொய்துகொண்டு போகாநிற்கும், ஆதலின் இப்பொழுது நின்கதிர்த்தோட்டினிடம் தலைசாயாது நிமிர்ந்து நின்று நெடுநாட் கழித்துக் கதிரீன்று விளைவாயாக! நீ நெடுங்காலம் வாழ்வாயாக! எ -று.
(வி - ம்.) நாடனொடு களவுப்புணர்ச்சி நீட்டிக்கச் செய்தலாலும், பகற்குறிக்கிடங் கொடுத்தலாலும் வாழியவென்றாள். வெறியெடுத்த காலை அறத்தொடு நிற்றலின் பின்வரையுநாள் தினை கொய்யுங்காலமும் வேங்கை மலருங்காலத்தொடுபட்டு வருதலால், அப்பருவங்கடந்து பின்னர்க் கொய்யும்படி காலம் நீட்டித்து விளைவாயாக வென்றாள்.
உள்ளுறை :- அருவியொலிக்கின்றவிடத்துத் தோன்றிய வாழையின் கனியை மந்தி கவருமென்றது, வெறியெடுத்து முழங்குமிடத்தும் தலைவன் அஞ்சாதுவந்து இவளது நலம் பருகுவானாவனென்றதாம். இனித் தமரெல்லாங்கூடி மகிழ்கின்றவிடத்து வரைவொடுபுகுந்து தலைவன் தலைவியை மகிழ்ந்து துய்ப்பானாவனெனவும். மெய்ப்பாடு - பெருமிதம். பயன்-வரைவுகடாதல்.
(பெரு - ரை.) தொடக்கத்தே தோழி தலைவியையும் உளப்படுத்தி யாம்.................ஒப்பி எனப் பன்மையாற் கூறியவள் பின்னர்த் தலைவியெனத் தானென வேற்றுமை கருதாளாய்த் தானே தலைவியாய் என் தளிரேர் மேனி என ஒருமையாற் கூறிய நுணுக்கமுணர்க. இது ஒருமை பன்மை மயக்கமன்றென்க. "நுடங்குநிலைப் பறவை உடங்கு பின்கவரும்" என்றும் பாடம். அன்பின் இன்குரல் எனக் கண்ணழித்து எமது இனிய குரலாலே கிளிகளை ஓப்பி எனவுமாம்.
(251)
திணை : பாலை.
துறை : இது, பொருள்வயிற்பிரியுமெனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.
(து - ம்.) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிவானெனக் குறிப்பாலறிந்து வருந்திய தலைமகளைத் தோழி, இவளுடைய குணங்கள் தலைவர் சூழ்ந்து மேற்கொண்ட வினையிலே குறுக்கிட்டுத் தடுத்தல் செய்திலபோலும்; ஆதலின் ஆற்றியிருக்கற்பாலதன்றி வேறு செய்யக் கடவதியாதெனக் கருதித் தேற்றாநிற்பது.