| எனவ கேளாய் நினையினை நீநனி |
5 | உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள் |
| பேரிசை உருமொடு மாரி முற்றிய |
| பல்குடைக் கள்ளின் வண்மகிழ்ப் பாரி |
| பலவுறு குன்றம் போலப் |
| பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே. |
(சொ - ள்.) ஒள் இழைக் குறுமகள் பேர் இசை உருமொடு மாரி முற்றிய பல் குடைக் கள்ளின் வள் மகிழ்ப் பாரி - ஒள்ளிய இழையை யணிந்த இளமகளாகிய தலைவி பெரிய முழக்கமுற்ற இடியுடனே மழை மாறாது சூழ்ந்து பெய்தலையுடைய பலவாகிய பனங்குடையிலிட்டுண்ணும் கள்ளினாலாகிய பேருணவையுடைய பாரியினது; பல உறு குன்றம் போல - பலாமரமிக்க பறம்புமலை போல; பெருங்கவின் எய்திய அருங்காப்பினளே - பெரிய அழகு அமைதலாலே இல்வயிற் செறிக்கப் பெற்று அரிய காவலுட்பட்டவளாயினாள்; உள்ளினும் பனிக்கும் - அங்ஙனம் காவலுட்படுதலானே இக் களவொழுக்கத்தைக் கருதினாலும் நடுங்குந் தன்மையளாயிராநின்றாள்; நீ புள்ளுப் பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும் - நீதானும் புள்ளினம் தம்தம் கூட்டின்கண்ணே சென்று கூடியின்புற்றாலும் தலைவனுந் தலைவியுமாகக் கூடிப் புணர்ந்தாரைக் கண்ணாலே கண்டாலும்; பள்ளி யானையின் வெய்ய உயிரினை - படுக்கையிலே கிடந்த யானைபோல வெய்ய பெருமூச்சினையுடையையாய்; கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து எனவ கேளாய் - மிகுதிப்பட வருத்தமுற்ற துன்பத்துடனே பெரிதும் அழிந்து யான் கூறுவனவற்றையுங் கேளாது; நனி நினையினை - மிகக் கருதுந் தன்மையுடையையாயினை; இங்ஙனம் வருந்தியாவதென்னோ? இன்னே சென்று வரைவொடு வந்து புகுதுவாய்; வரைந்து கொள்வாய்; யான் கூறுவன இவைகளேயாகும்; எ - று.
(வி - ம்.) மாரி முற்றிய குன்றமென்க.
ஆற்றூறஞ்சல் முதலியவற்றாலும் காணும்பொழுதிற் காணாப் பொழுது பெரிதாயிருத்தலாலும் வரையுங் கருத்தன்றித் தலைவிக்கு இக்களவொழுக்கம் உடன்பாடில்லை யெனக் குறிப்பாள், உள்ளினும் பனிக்கு மென்றாள். ஒருகாரியஞ் செய்வார்க்கு அக்காரியம் முட்டுப்பட்டவழி அறிவு மயங்கல் இயல்பாதலின், அருங்காப்பினால் நின்களவொழுக்க முட்டுப்பட்ட வழிப் பெரிதும் அழிந்து நினைவுடையை யாயினை: என்கூற்றையுங் கேட்பாயல்லை என்று இரங்கிக் கூறினாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) பாரியின் குன்றம் போல அரிய காவலையுடையள் என உவமையைக் கவினுக்குமட்டுமின்றிக் காப்பிற்கும் கொள்க.