பக்கம் எண் :


436


விடையும் பெறாயாகி; மெல்லச் செலீஇய செல்லும் ஒலி இரும்பரப்ப - மெல்ல நின்னூர்க்குப் போகும் பொருட்டுச் செல்லாநின்ற ஒலிக்கின்ற பெரிய கடற் பரப்பினையுடைய தலைவனே!; நேர் கண் சிறுதடி நீரின் மாற்றி வானம் வேண்டா உழவினெம் கானலஞ் சிறுகுடிச் சேர்ந்தனை செலின் - நேர்மையான இடத்தையுடைய உப்புப் பாத்தியிலே கடலின் நீரைக் கொணர்ந்து பாய்ச்சி விளைவித்துக் கொள்வதன்றி மழையை விரும்பாத வேளாண்மையுடைய கடற்கரைச் சோலை சூழ்ந்த எமது சிறுகுடியின்கண்ணே வந்து சேர்ந்து இராப்பொழுதில் அங்கே தங்கியிருந்து செல்வாயாயின்; உமணர் தந்த உப்புநொடை நெல்லின் அயினி மா இன்று அருந்த - உப்பு வாணிகராலே கொண்டுவரப்பட்ட உப்பு விலையினால் பெற்ற நெல்லைக் குற்றி ஆக்கிய அரிசிக்காணத்தை நின் குதிரை இன்று உண்ணாநிற்ப; நீ வீக்கணம் நாறு பெருந்தொடை புரளும் மார்பில் துணை இலை தமியை சேக்குவை அல்லை - நீயும் மலரின் கூட்டம் நன் மணங்கமழும் பெரிய பூமாலை புரளுகின்ற மார்பில் அணைக்குந் துணையின்றித் தமியே தங்குவாயல்லை; அத்தகைய துணையாகிய தலைவியை அணைத்து உறங்கப் பெறுவாய்; எ - று.

    (வி - ம்.) சிறுதடி - உப்புப்பாத்தி. "காயற் சிறுதடி கண்கெடப் பாய்தலின்" என்றார் (366) அகத்தினும். இனியகூறல் - இம் முத்து நல்லன, இக் கண்ணி நல்லன, இத் தழை நல்லன, இவை கொள்ளற்பாலன என்பனவற்றைக் கூறுதல் அடும்பு கொய்தல் - அதன் மலரைக் கொய்து பாவைக்குச் சூட்டக் கொடுத்தல். துனியில் நன்மொழி - சினவாது இரங்குமாறு கூறும் நல்ல மொழி. நின் இரப்புக்கியைந்துழிக் களவு நீட்டிப்பின் ஏதம் பயக்குமாகலானும், வரைந்தன்றிப் பலரறிய மனைவயிற்றங்க இயலாதாகலானும் வரைந்தெய்துக வென்பாள் இங்ஙனம் கூறினாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவனை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) 'சொல் எதிர் பெறாஅய் உயங்கி' என்றும், 'நீலக்கணம் நாறு பெருந்தொடை' என்றும் பாடவேற்றுமை யுண்டு.

(254)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, ஆறுபார்த் துற்றது.

    (து - ம்.) என்பது, "ஒருதலை யுரிமை வேண்டியும்" என்ற (தொல். பொ. 225) சூத்திரப்படி வரைதல் வேட்கையுற்ற தலைமகள் தோழியை நோக்கி ஆற்றது ஏதங்கூறி வரைந்தெய்தும்படி தலைமகனுக்குச் சொல்வாயாக வென்பாள் 'கானவர்துஞ்சார், நெறியின் கண்ணே புலிமுழங்கா நிற்கும், மழைபெய்து இடி இடியா நிற்கும். இத்தகைய பொழுதில் நாம் காமத்தால் வருந்தினும் அவர் வாராதிருத்தல்