(து - ம்.) என்பது, களவொழுக்கத்துத் தலைவன் கேட்டு வரையுமாற்றானே தோழி தலைவியை நோக்கித் "தினை முற்றின; இனி அவற்றைக் கொய்த உடன் நின்னை இல்வயிற் செறிப்பாராதலின் நாடனோடு இயைந்த கேண்மை இனி அரியவாகுமெனக் கருதா நிற்பேன்; அப்பால் யாது செய்வா"மெனக் கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதுவுமது.
| யாங்குச்செய் வாங்கொல் தோழி பொன்வீ |
| வேங்கை ஓங்கிய தேம்கமழ் சாரல் |
| பெருங்கல் நாடனொடு இரும்புனத்து அல்கிச் |
| செவ்வாய்ப் பைங்கிளி ஓப்பி அவ்வாய்ப் |
5 | பெருவரை அடுக்கத்து அருவி ஆடிச் |
| சாரல் ஆரம் வண்டுபட நீவிப் |
| பெரிதமர்ந்து இயைந்த கேண்மை சிறுநனி |
| அரிய போலக் காண்பேன் விரிதிரைக் |
| கடல்பெயர்ந் தனைய ஆகிப் |
10 | புலர்பதங் கொண்டன ஏனற் குரலே. |