வெயிலிலே காயுந் தினையைக் கைவிரலாலே துழாவி வருதல் போல மணம் வீசும் ஞாழலின் உதிர்ந்த மலரைக் காலால் வரித்துக் கோலஞ் செய்யுந் துறையையுடைய தலைவனொடு; புணர்த்த இன் அமர் கானல் தனியே வருதல் - கூட்டிய இனிய விருப்பத்தையுடைய கழிச் சோலையிலே அவளின்றித் தனியே நான் வருதல்; நனிபுலம்பு உடைத்து என வாரேன் மன் யான் - மிக வருத்தமுடையதாய் இராநின்றது எனக் கருதி அதனால் பெரும்பாலும் வாராதிருந்த யான்; வந்தனென் - முன்பு ஒருநாள் வந்துளேனாகி, சிறுநா ஒள் மணித் தெள் இசை கடுப்ப இனம் மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல் - சிறிய நாவையுடைய ஒள்ளிய மணியின் தெளிந்த ஓசையைப் போலக் கூட்டமாகிய மீனைத் தின்னுகிறதற்கு வந்து கூடுகின்ற புள் ஒலிக்குங் குரலைக் கேட்டு; இவை மகன் என்னா அளவை - இவ்வொலி தலைமகனது தேர் மணியோசை போலுமென்றுட்கொண்டு "இவ்வோசை தலைமகன்" என்று சொல்லெடுக்கு முன்; வயமான் தோன்றல் வந்து நின்றனன் - வலிய குதிரையையுடைய தோன்றலாவான் ஆங்கு வந்து நின்றனன்; இப்பொழுது அங்ஙனமும் காணாதபடி காவல் செய்தாயிற்று; எ-று.
(பெரு - ரை.) இச் செய்யுட்குப் பயன் 'அறத்தொடு நிலை' என்று உரையாசிரியர் கூறுவது பொருந்தாது. இது தலைவி காப்புக் கைமிக்கமையால் இரவுக்குறிக்கண் தலைவனைக் காணவியலாதிருத்தலைத் தோழி தலைவனுக்குக் கூறி இரவுக்குறி மறுத்தபடியாம். இதற்குப் பயன் வரைவுகடாதலேயாம். முதற்றுறைக்குத் தோழி தலைவனுக்குத் தலைவியின் காப்பு மிகுதியுணர்த்து மாத்திரையே கொள்க.
இரண்டாவது துறைக்கு, காப்புமிகுதி இலதாகவும் தோழி அஃது உளதாகப் படைத்துமொழிந்து தலைவனை வரைவுகடாவினள் எனக் கோடல் வேண்டும்.