பக்கம் எண் :


458


காதலன்பால் அளவு கடப்பக் காதல் உண்டாக்கியும் அவனால் விரும்பப்படேமா யிருப்பது எக்காரணத்தாலெனக் கேட்போமோவென ஆராய்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கும் "களனும் பொழுதும் . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியே கொள்க.

     துறை : (2) தலைமகன் வந்தொழுகவும் வேறுபாடுகண்டாள் அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய் வெறியெடுத்துக்கொள்ளும் வகையான் என்றதூஉமாம்.

     (து - ம்.) என்பது, வெளிப்படை (உரை இரண்டற்கு மொக்கும்).

     (இ - ம்.) இதுவுமது.

    
சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்க 
    
மால்பெயல் தலைஇய மன்னெடுங் குன்றத்துக் 
    
கருங்கால் குறிஞ்சி மதனில வான்பூ 
    
ஓவுக்கண் டன்ன இல்வரை இழைத்த 
5
நாறுகொள் பிரசம் ஊறுநா டற்குக் 
    
காதல் செய்தும் காதலம் அன்மை 
    
யாதெனிற் கொல்லோ தோழி வினவுகம் 
    
பெய்ம்மணல் முற்றங் கடிகொண்டு 
    
மெய்ம்மலி கழங்கின் வேலற் றந்தே. 

     (சொ - ள்.) தோழி மணல் பெய்ம் முற்றம் கடிகொண்டு - தோழீ! மணலைப் பரப்பிய முற்றத்தைச் சிறப்புச் செய்து; மெய்ம்மலி கழங்கின் வேலன் தந்து - மெய்ம்மையைக் கூறுகின்ற கழங்கிட்டுக் குறிபார்த்தலையுடைய படிமத்தானை அன்னை வீட்டில் அழைத்து வந்திருத்தலானே; சூர் உடை நனந்தலைச் சுனை நீர் மல்க - அச்சஞ் செய்தலையுடைய இடமகன்ற சுனையில் நீர் நிறையும்படியாக; மால் பெயல் தலைஇய மன் நெடுங்குன்றத்து - மேகம் மழை பெய்துவிட்ட மிக்க நெடிய குன்றத்தின்கண்ணே; கருங்கால் குறிஞ்சி மதன் இல வான் பூ - கரிய காம்பையுடைய குறிஞ்சியின் வன்மையில்லாத மெல்லிய வெளிய பூ; ஓவுக் கண்டு அன்ன இல்வரை இழைத்த நாறுகொள் பிரசம் ஊறும் நாடற்கு - ஓவியன் மலையிடத்தே சித்திரித்தாற்போன்ற வேட்டுவர் இல்லங்களிலே இழைக்கப்பட்ட தேனடைக்கு வேண்டிய அளவு மணங்கொண்ட தேனூறுகின்ற நாட்டையுடைய தலைவனுக்கு; காதல் செய்தும் காதலம் அன்மை யாதெனின் வினவுகம் - யாம் பலபடியாகக் காதலுண்டாக்கியிருந்தும் அவனாலே காதலிக்கப்படுந் தன்மையே மல்லாதிருத்தல் எக்காரணத்தினாலோ? இவ்வொரு காரியத்தை அந்த வேலன்பாற் கேட்போமாக; எ - று.