(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த தலைமகன் தலைவிகொண்ட ஊடலைத் தணித்தற்பொருட்டுத் தூதாகவிடுக்கப்பட்ட வாயிலவரைத் தோழி நெருங்கி நம் காதலர் இறைவியின் கண்கள் தம்மைப் பிணிக்குமென்றெண்ணாது கடுஞ்சுரஞ் செல்பவர் பின்பு எதைத்தான் செய்யார்? பரத்தையிற் பிரிதலோ அவர்க்கு அரிது, அவர் கருதியவை யாவர் அறிவார் என்று மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பரணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.
துறை : (2) செலவழுங்குவித்ததூஉமாம்.
(து - ம்.) என்பது, வெளிப்படை (உரை இரண்டற்கும் ஒக்கும்.)
(இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" என்னும் விதி கொள்க. இத்துறைக்கு இதனை முன்னிலைப் புறமொழியாகக் கொள்க.