பக்கம் எண் :


474


அல்லை; சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன் நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ - சிறிய குறிய நின் பேடு விரும்புதலும் நீ விரைவாக வோடிச் சென்று அதன் மனம் நெகிழப் புணர்ந்து தலையளி செய்ததன் பயனாகவோ?; அன்பு இலர் வெம்மலை அரும் சுரம் இறந்தோர்க்குவர அவண் சென்று என் நிலை உரையாய் - என்னிடத்து அன்பிலராகிக் கொடிய மலையிலே செல்லுதற்கரிய சுரத்திற் சென்ற தலைவர்பால் ஆங்குச்சென்று அவர் விரைவில் வருமாறு ஈங்கு யானுற்ற நிலைமையை யுரைத்தாயுமில்லை; நினக்கு மெய்யே கருமை அன்றியும் அறிவும் செவ்வன் கரிதோ - நினக்கு நின்னுடம்பே கரியததாலன்றியும் அறிவும் (நன்கு) கரிய நிறமுடையதோ? அதனையேனுங் கூறிக்காண்; யான் நினக்கு உரைத்தென இந்நோய்ப் படுக - இங்ஙனம் கொடியையாகிய நின்னிடத்து என் துன்பத்தைக் கூறியதனாலேயே இந்நோயிலே பட்டு இப்பொழுதே இறப்பேனாக; வாழி - நீ நீண்டகாலம் வாழ்ந்திருப்பாயாக!; எ - று.

     (வி - ம்.) தில் : காலத்தின் மேலது. இது பசலை பாய்தலும், தூதுமுனிவு இன்மையுமாம்.

    கூடி இன்பந் துய்க்கின்றவர் தம்மைப்போலப் பிறருந் துய்க்கக் கருதுவர்; நீ அங்ஙன மின்றி உரைத்தாயு மில்லை யாதலால் அறிவுங்கரிதோ வென்றாள். கொடிய நெஞ்சுடையாரைக் கரிய நெஞ்சினரென்பது வழக்கு. "கரிமாலை நெஞ்சினான்" என்றார் சிந்தாமணியினும்; (நாமகள்- 265) கொடியோர்பால் ஒருகாரியங் கூறினால் அக்காரியம் மாறாக முடியுமென்பதற் கேற்ப நின்பாற் கூறியதன் காரணமாக அவர்வாரா தொழிதலின் நோய்மிக்கிறப்பேன் என்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) யான் நினக்கு உரைத்தென இந்நோய் படுக என இயைக்க. அம்ம கேட்பித்தற்கண் வந்தது. தன்மெய் பீர்க்கப் பூப்போன்று பசலை பூத்தமை கூறுவாள் நாற்றம் இன்மையிற் பசலையூதாய் என்றாள். சிறுகுறும் பறவை என்றது பெடை வண்டினை.

(277)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, தோழி தலைமகட்கு வரைவுமலிந்தது.

     (து - ம்.) என்பது, வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்தோன் குறித்த காலத்து வாராமையாலே தலைமகள் வருந்தினாளாக, அப்பொழுது அவன் விரைவில் வருவதனை அறிந்த தோழி தலைவியை நெருங்கி 'நம் காதலன் பலரறிய வருதலானே நின்னை வரைந்துகொள்ள வருகிறானென்பதை யறிந்தேன்' என்று கூறி உள்ளுறையால் நீ கவலையின்றி வாழ்வாயாக வெனவும் மகிழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "ஆங்கு அதன் தன்மையின் வன்புறை யுளப்பட" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.