பக்கம் எண் :


486


சிறிது நனி விரையல் என்னும் - உறுதிப்பாட்டை ஆராய்கையாலே 'ஏ நெஞ்சமே! நீ நிலையிலே பொருந்தி நின்று சில பொழுதளவும் மிக விரையாதே கொள்' என்று கூறாநிற்கும்; ஆயிடைவருந்திய என் உடம்பு - அவ்விரண்டும் மாறுபடுதல் கொண்டமையின் அவற்றிடை நின்று வருந்துகின்ற என் உடம்பானது; ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல - விளங்கிய தலையிலே தாங்கிய கொம்பினையுடைய களிற்றியானை ஒன்றோடோன்று மாறாகப் பற்றி யீர்த்த தேய்ந்த புரியை உடைய பழைய கயிறு இற்றொழிவது போல; வீவது கொல் - அழிய வேண்டுவது தானோ? இஃதொரு கொடுமை யிருந்தவாறு நன்று!; எ - று.

    (வி - ம்.) ஆயிடை வருந்திய உடம்பெனக் கூட்டுக. எய்த்தல் - அறிதல்; எய்யாமை - அறியாமை. செல்லல்தீர்க்கம் செல்வாமென்றது, காதல் கைம்மிகல்.

    "உள்ளம் அவளாலே பிணிப்புண்டமையின் அது மீண்டும் அவள் பால் ஏகக் கருதியதாயிற்று; அறிவு பிணிப்புறாமையின் ஆராய்ச்சியின் மேலதாய் விரையலென்றது", என இதனானே மகளிர்பால் மயங்கினார்க்கு ஆராய்ச்சி தோன்றாமையும் மயங்காதார்க்கு ஆராய்ச்சி மேம்படத் தோன்றுவதுங் கூறினான். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - இடைச்சுரத்தழுங்கல்.

    (பெரு - ரை.) 'செல்லல் தீர்கம்' என்றும் பாடம். இதற்கு யாமுற்ற துன்பம் தீர்தற்பொருட்டு என்க. 'உறுதி தூக்காத் தூங்கி' என்றும் பாடம்; இதற்கு "அறிவு உறுதிப்பொருளை ஆராய்ந்து தெளிந்து அத் தெளிவிற்கிணங்க அதன்கட்டங்கி நின்று, என்க" "செய்வினைமுடியாது எவ்வஞ்செய்தல் எய்யாமையோடு இளிவுதலைத் தரும்" என்னும் அறிவுரையை நெஞ்சத்தே ஆழப்பதித்திக் கொள்க. "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து, ஆள்வினை யின்மை பழி" எனவரும் திருக்குறளும் 618 ஈண்டு நினைக. ஓளிறேந்து மருப்பின் என்பது வினைத்தொகையடுக்கு.

(284)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்ப அம்பலும் அலருமாயிற்றென்று சொல்லியது.

    (து - ம்.) என்பது, அங்ஙனம் தலைமகன் கேட்குமாறு கூறுகின்றவள், குன்ற நாடன் இரவில் வருதலன்றியும் அயலார் கூறும் பழிச்சொல்லுக்கும் அகலானாகிப் பகற்பொழுதினும் புனத்தே வருகின்றனன்; அவனது கேண்மை நல்லதில்லையென இருவகைக்குறியையு மறுத்து உள்ளுறையாலே உடன்கொண்டு சென்றாயினும் வரைந்து கொள்ளும்படி சூழ்ந்து கூறாநிற்பது.