பக்கம் எண் :


487


    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் கொள்க.

    
அரவிரை தேரும் ஆரிருள் நடுநாள் 
    
இரவின் வருதல் அன்றியும் உரவுக்கணை 
    
வன்கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி 
    
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு 
5
மனைவாய் ஞமலி ஒருங்குபுடை ஆட 
    
வேட்டுவலம் படுத்த உவகையன் காட்ட 
    
நடுகாற் குரம்பைத்தன் குடிவயிற் பெயரும் 
    
குன்ற நாடன் கேண்மை நமக்கே 
    
நன்றால் வாழி தோழி என்றும் 
10
அயலோர் அம்பலின் அகலான் 
    
பகலின் வரூஉம் எறிபுனத் தானே. 

    (சொ - ள்.) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; வல்கைக்கானவன் வெம்சிலை வணக்கி உரவுக் கணை உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு - திண்ணிய கையையுடைய கானவன் தனது வெய்ய வில்லை வளைத்து வலிய கணையை எய்து நெஞ்சிலே பாய்த்திக் கொன்ற முட்பன்றியேற்றையைக் கைக்கொண்டு; வேட்டு வலம் படுத்த உவகையன் - வேட்டையிலே தான் பெற்ற வென்றியாலாய உவகையுடையவனாகி; மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட - மனையகத்துள்ள நாய்கள் எல்லாம் ஒரு சேரப் பக்கத்திலே வந்து குரைத்து விளையாட; காட்ட நடுகால் தன் குரம்பைக் குடிவயின் பெயரும் குன்ற நாடன் - காட்டகத்துள்ள நட்டகாலிலே கை சேர்த்துப் பிணித்த தானிருக்கும் குடிசையையுடைய சேரியின்கண்ணே செல்லாநிற்குங் குன்ற நாடன்; அரவு இரைதேரும் ஆர் இருள் இரவு நடுநாள் - பாம்புகள் தமக்கு வேண்டிய இரையைத் தேடி உழலாநின்ற இயங்குதற்கரிய இருள்மிக்க இரவு நடுயாமத்தில்; வருதல் அன்றியும் - நம்பால் வருவதல்லாமலும்; என்றும் அயலோர் அம்பலின் அகலான் - எப்பொழுதும் அயலவர் கூறும் பழிச்சொல்லைக் கேட்டும் அகன்றுபோகானாகி; எறி புனத்தான் பகலின் வரூஉம் - வெட்டியுழுது விதைத்த தினைப்புனத்தின் கண்ணே பகற் பொழுதினும் வாராநின்றான்; கேண்மை நமக்கு நன்று - ஆதலின் அவனுடைய நட்பானது நமக்கு நல்லதோ? நல்லதன்றாயிற்றுக் காண்; எ - று.

    (வி - ம்.) நன்று - நல்லதன்று என்னும் பொருள்தோன்ற எடுத்தலோசையாற் கொள்க. இஃது, அவன் புணர்வுமறுத்தல்.