பக்கம் எண் :


489


உதிராநிற்கும்; புல் என்னும் குன்றம் சென்றோர் மன்ற என் உயிர் செலீஇயர் என - பொலிவழிந்த குன்றத்து எங்காதலர் சென்றனர் ஆதலால் திண்ணமாக இனி என்னுயிர் சென்றொழிவதாக என்று; புனை இழை நெகிழ விம்மி நொந்து நொந்து இனைதல் ஆன்றிசின் - நீ அணிந்த கலன்கள் கழன்று விழும்படி விம்மியழுது மிகநொந்து வருந்துகின்றதனைச் சிறிது பொறுப்பாயாக!; நினையின் நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய நின்தோள் அணிபெற வரற்கும் அன்றோ - கருதுங்காலைத் தம்மை நட்புக் கொண்டவர் தாம் செல்வமடைய வேண்டியதற்காகவும் அடைக்கலமாகப் புகுந்த நின்னுடைய தோள்கள் நல்ல கலன்களை அணியப் பெறுவதற்காகவும் அன்றோ; அவர் சென்ற திறம் - அவர் சென்ற தன்மையாகும்; எ - று.

    (வி - ம்.) உடை - உடைமரம். வியம் - வழி. உடைவியத்துக் கற்பாறையிலே குழை ஊசலன்ன அலரி கோலஞ் செய்யுமென மாறிக் கூட்டுக. ஊசல் போறலின் ஊசலென்றார். இக்காலத்துச் சிமிக்கியெனவுங் குடைக்கடுக்கன் எனவுங் கூறுப: குமிழம்பூ அங்ஙனமேயிருப்பதுகண்டு தெளிக. பெறுவரல்: ஒருசொல். அணிபெறுதற்கெனவே தலைவன் வணிகனானமை தெளிக.

    கல்லறை குமிழமலர் வரிக்குமென்றது, சென்றோர் மீண்டு நின்மாட்டு அருங்கலம் பலகொணர்ந்து அலங்கரிப்பரென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைமகளை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) "ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன" என்றும் பாடம்: இதற்கு ஊசலாடுகின்ற ஒள்ளிய குழையின் உடைந்த சிதர்கள் பொருந்தினாற்போன்று குமிழின் அலரி கல் அறை வரிக்கும் என்று இயைத்துக் கொள்க. உடை - உடைந்த சிதர்கள். ஊசல் என்பது முதலாக என்னுயிர் ஈறாக என்னுந் துணையும் தோழி தலைவியின் கூற்றைக்கொண்டு கூறியபடியாம்.

(286)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.

    (து - ம்.) என்பது இல்வயிற் செறித்துக் காவல் செய்யப்படுதலாற் புறத்தே போதற்கியலாது ஆற்றாமைமிக்க தலைவி, முன்பு தலைவன் நம்பால் வந்தபொழுதெல்லாம் அஞ்சாத என்னெஞ்சம் இப்பொழுது இல்வயிற்செறித்தலால் இரவிலே புள்ளொலி கேட்குந்தோறும் தலைவனது தேரின் மணிக்குரலோவென்றஞ்சித் துயில்கொண்டிலதென நொந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "தமர் தற்காத்த காரண மருங்கினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.