வானம் கார்காலத்தைச் செய்துவிட்டதாதலின், அவரால் அளித்தற்குரிய யான் இப்பொழுது அருளப்படாமலிருக்கின்றே'னென்று நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்பதனாற் கொள்க.
| அம்ம வாழி தோழி காதலர் |
| நிலம்புடை பெயர்வ தாயினுங் கூறிய |
| சொற்புடை பெயர்தலோ இலரே வானம் |
| நளிகடல் முகந்து செறிதக இருளிக் |
5 | கனைபெயல் பொழிந்து கடுங்குரல் பயிற்றிக் |
| கார்செய்து என்னுழை யதுவே யாயிடைக் |
| கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய |
| பெருமர வேரடிப் போல |
| அருளிலேன் அம்ம அளியேன் யானே. |
(சொ - ள்.) தோழி வாழி அம்ம - தோழீ ! வாழி ! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக!; நிலம் புடை பெயர்வது ஆயினும் காதலர் கூறிய சொல் புடை பெயர்தல் இலர் - இந்நிலம் தன் நிலையினின்று பெயர்வதாயிருந்தாலும் நம் காதலர் தாங்கூறிய சொல்லை அதனிலைமையினின்றும் பெயர்த்துக் கூறுபவரல்லர்; வானம் நளிகடல் முகந்து செறிதக இருளிக் கனைபெயல் பொழிந்து - ஆதலின் குறித்த பருவத்து வருவர் அதன்முன் மேகமானது நெருங்கிய கடனீரை முகந்து செறிவு பொருந்த இருண்டு மிக்க மழையைப் பெய்து; கடுங்குரல் பயிற்றிக் கார்செய்து என் உழையது - கடிய குரலைக் காட்டி இடித்துக் கார்காலத்தைச் செய்து துன்புறுத்துதற்கு என்மாட்டு அமைந்திராநின்றது; அளியேன் யான் - இப்பொழுது அளிக்கத்தக்க தகுதியுடையேனாகிய யான்; ஆயிடைக் கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய பெருமர வேர் அடி போல அருள் இலேன் - அங்கே கொல்லையில் கோவலர்கள் இரவில் எரி கொளுத்திய வெட்டுண்ட பெரு மரத்தினது வேரடிக் கட்டையைப் போலக் காமநோய் கனற்றலானே அவரான் அருள் செய்யப் பெறேனாயிராநின்றேன்; எ - று.
(வி - ம்.) காட்டின்கட் கொல்லையிற் கோவலர் கொளுத்திய வேர்க்கட்டை அவிப்பாரின்றித் தானே வெந்து தணியுமன்றே, அப்படிப்போல அருள்செய்யுந் தலைவரின்றி யான் காமத்தீயால் அழிந்தொழியாநின்றேனென உவமையொடு பொருத்திக் காண்க. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) பெருமர வொடியல் போல என்றும் பாடம். பெருமர வேரடிப் போல என இந்தப் பாடமே ஏடெழுதுவோராற் பிறழவெழுதப்பட்டிருத்தல் கூடும்.
(289)