பக்கம் எண் :


494


    திணை : மருதம்.

    துறை : (1) இது, பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, காமக்கிழத்தி விறலியை நோக்கிச் சொல்லுவாள்போலக் கூறித் தலைவியைப் புலவி தணிக்கின்றாள், ஊரனது தொடர்பை விரும்பினையாயின் என் சொல்லைக் கொள்ளுவையாக; நின் தகுதிக்கு இப்புலவி தகாதுகாண்; அவனை வண்டென்பதன்றி மகனென்னாராதலிற் புலவாதே கொள்ளென நயந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு,

  
"காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின் 
  
 தாய்போற் றழீஇக் கழறியும் மனைவியைக் 
  
 காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும்"             (தொல்.கற். 10)  

என்னும் விதிகொள்க.

    துறை :(2) பரத்தையிற் பிரிய வாயிலாய்ப்புக்க பாணன் கேட்பத் தோழி சொல்லியதூஉமாம்.

    (து - ம்.) என்பது, வெளிப்படை.

    (இ - ம்.) இதற்கு, "பாணர் . . . . . பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்" (தொல். கள. 9) என்னும் விதிகொள்க.

    
வயல்வெல் ஆம்பல் சூடுதரு புதுப்பூக் 
    
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் 
    
ஓய்விடு நடைப்பகடு ஆரு மூரன் 
    
தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொல் 
5
கொள்ளல் மாதோ முள்ளெயிற் றோயே 
    
நீயே பெருநலத் தகையே அவனே 
    
நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித் 
    
தண்கமழ் புதுமலர் ஊதும் 
    
வண்டென மொழிப மகனென் னாரே. 

    (சொ - ள்.) முள் எயிற்றோய் - முட்போன்ற கூரிய பற்களையுடையோய்!; வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் கன்று உடைப் புனிற்று ஆ தின்ற மிச்சில் - வயலில் மள்ளர் அறுக்கும் கதிரோடு அறுபட்டு அரிச் சூட்டொடு களத்திற் கொணர்ந்து போடப்பட்ட வெளிய ஆம்பலின் அப்பொமுது மலர்ந்த புதிய பூ, கன்றை அணிமையில் ஈன்றுடைய பசுவானது தின்று எஞ்சிய மிச்சிலை; ஓய்விடு நடைப் பகடு ஆரும் ஊரன் - உழுது விட்ட