ஓய்ந்த நடையையுடைய பகடு தின்னா நிற்கும் ஊரனுடன்; தொடர்பு நீ வெஃகினையாயின் - கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்துதலை நீ விரும்பினையாதலின் 'அவள் அவனோடு கட்டில் வரை யெய்தினாள்' என்று ஊரார் கூறுகின்ற சொல்லைக்கொண்டு என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே. இனி என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ?; என் சொல் கொள்ளல் - விருப்பமாயின் யான் கூறுகின்றதனைக் கொள்வாயாக!; நீ பெரு நலத்தகை - அதுதான் யாதோவெனில் பெரிய இளைமையும் தகுதிப்பாடும் உடையையாதலால் நீ வேறுபட்டுக் கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாதது காண்; அவன் நெடுநீர்ப் பொய்கை நடு நாள் எய்தித் தண் கமழ்புது மலர் ஊதும் வண்டு என மொழிப - அவனை நெடிய நீரையுடைய பொய்கையில் நடுயாமத்திலே தண்ணிதாய் நறுமணங் கமழும் புதிய மலரிலே சென்று தேனுண்ணும் வண்டு எனச் சொல்லுவனரல்லாமல்; மகன் என்னார் - நல்ல ஆண்மகன் என யாருங்கூறார்; ஆதலின் அவனைப் புலவாதே கொள்!; எ-று.
(வி - ம்.) நள்ளிரவிலே சென்று புதிய பரத்தையை விரும்பித் துய்ப்பவன் என்பாள், நடுயாமத்து விரியும் பூவை உண்ணுகின்ற வண்டெனக் கூறினாள்.
உள்ளுறை :- புனிற்றா தின்ற மிச்சிலை உழுதுவிடுபகடு சென்று தின்றாற்போல, நீ இளமைச் செவ்வியெல்லாம் அவனை நுகர்ந்து புதல்வனைப் பயந்த பின்னர் நீ உண்ட மிச்சில் போன்ற அவனைப் பிறர் நுகர்கின்றனர்; அது நினக்கு இழுக்கன்று என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - ஊடல் தணித்தல்.
(2) உரை : முள்ளெயிற்றோய், நீ ஊரனது தொடர்ச்சியை விரும்பின் என்சொல்லை ஏற்றுக்கொள்ளவேண்டா; கொள்ளின் நீ மிக்க அழகுடையாயிருந்தும் அவனை வண்டென்பதன்றி ஆண்மகனென்னார். ஆதலின், அவன் தொடர்பு என்ன பயனுடையதுகாண்? எ - று. மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயில்மறுத்தல்.
(பெரு - ரை.) இச்செய்யுட்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் (தொல். கற். 10 உரை மேற்கோள்.) விளக்கம் வருமாறு:-
"இதனுள் நீ இளமைச் செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த பின்னர் உழுதுவிடு பகடு எச்சிலை அயின்றாற்போலப் பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்று எனவும்; அவனோடு கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்த வேண்டும் நீ அவள் அவனோடு கட்டில்வரை எய்தியிருக்கின்றாளென்று ஊரார் கூறுகின்ற சொல்லை என்னைப்போல வேறுபட்டுக்கொள்ளாதே கொள்வது நின் இளமைக்கும் எழிற்கும் ஏலாதெனவும், அவனை வண்டென்பதன்றி மகன் என்னாராகலின் அவன் கடப்பட்டாண்மை அதுவென்றுங் கூறினாள்; இனி என்சொற் கொள்ளன்மாதோ என்பதற்கு என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ? விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க (என்க) எனவரும்.
(290)