பக்கம் எண் :


5


திண்ணமாக மேதக்கன ஆதலின்; நீர் இன்று அமையா உலகம் போலத் தம் இன்று அமையா நம் நயந்து அருளி - அவர் நீரையின்றியமையாத உலகியல் போலத் தம்மை யின்றியமையாத நம்பால் முன்பு விருப்பமிக வைத்தருளி; நறுநுதல் பசத்தல் அஞ்சி - பின்பு பிரிதலால் நம் நறிய நுதல் பசலையூர்தற்கு அஞ்சி; செய்பு அறியலர் சிறுமை உறுபவோ - செய்வதறியாராய்த் தடுமாற்றமடைவாரோ?; அங்ஙனம் செய்யார்காண்; எ - று.

    (வி - ம்.) சாந்து - சந்தனமரம். புரை - உயர்ச்சி. சிறுமை - நோயுமாம்தாமரைத்தாது தலைவனுள்ளத்திற்கும் சந்தனத்தாது தலைவியுள்ளத்திற்கும் உவமையாக்கி இருவருட்கருத்தும் ஒத்தவழி சாந்திலே தீந்தேனிறால் வைத்தது போலத் தலைவன் தலைவிபால் அன்புவைத்தானெனப் பொருந்தவுரைக்க. இடையிலே பலவாய சொற்களைப் பொருந்தப் பெய்துரைப்பனவெல்லாம் இசையெச்சமெனக் கொள்க. [இசை யெச்சமாவது வாக்கியங்களில் அவ்வவ்விடங்கட்கு ஏற்றபடி ஒரு சொல்லும் பல சொற்களுமாக வருவித்துரைக்கப்படுவது.]

    இயற்கைப் புணர்ச்சி யிறுதியின்கண் நின்னிற் பிரியேனென்றதனை இன்றுகாறும் நிலையிட்டவராதலின், இனியும் பிரியக்கருதாரென்றதை அடக்கி நின்ற சொல்லரென்றாள். யானோக்குந்தோறும் எனக்கு இனியராய் என்னை மகிழ்விப்பவர், அம்மகிழ்வுக்கு ஊறுண்டாகப் பிரியாரென்னுங் கருத்தால் நீடுதோன்றினியரென்ற இதுவும், அதனையே நோக்கி நின்றது. "உழையமாகவும் பனிப்பவள், பிழையலள் மாதோ பிரிதும்நா மெனினே" எனக் கொண்டவராதலின் "என்றும் என்தோள் பிரிபறியலர்" என்ற இதுவும் பிரியாரென்பதனை வலியுறுத்திற்று. பசத்தல் - பசலைபாய்தல். இது கண்ணாடிமேல், வாயினாலூதிய ஆவிபட்டு அக் கண்ணாடி மழுக்கமடைவது போலத் தலைவியின் நெற்றியிலுள்ள ஒளி தலைவனைப் பிரிதலால் மழுங்கித் தோன்றுதல்; இதனைப் பீர் எனவும் பொன் எனவுமுரைப்பர்.

    நீடுதோன்றினியரென்றும், தோள் பிரிபறியலரென்றுங் கூறியதனால் மெய்ப்பாடு-உவகை, பயன்-ஆற்றியிருத்தல், திணை-குறிஞ்சி. கைகோள்-கற்பு. தலைவிகூற்று. கேட்போர் தோழி. (இதிற்கிடந்த நீரின்றமையா என்ற கருத்துடையது; குறள், 20. இடையறாதொழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல். நீரின்றமையாதுலகு என்பது எல்லாரானுந் தெளியப்படுதலின், அதுபோல ஒழுக்கும் வானின்றமையாமை தெளியப்படும் என்பார், "நீரின்றமை யாதுலகு எனின்" என்றார்.)

    இப்பாட்டுக் கற்பின்வழிப் பிரிவாதலின் ஏற்றற்கட் டலைவிகூற்று நிகழ்ந்தது; பிரிவுணர்ந்து புலந்துரைப்பின் நாணழிவாமென்பர் நச்சினார்க்கினியர்; (தொல்காப்பியம், பொருளதிகாரம், சூத்திரம்-147, உரை)

    (பெரு - ரை.) நீடு தோறினியர் என்றும் பாடம். இதற்குப் பழகுந்தோறும் இனிமை மிகுதற்குக் காரணமானவர் என்று பொருள் கூறுக. (1)