பக்கம் எண் :


513


    
நீண்மலைக் கலித்த பெருங்கோல் குறிஞ்சி 
    
நாள்மலர் புரையும் மேனிப் பெருஞ்சுனை 
    
மலர்பிணைத்து அன்ன மாயிதழ் மழைக்கண் 
    
மயிலோர் அன்ன சாயல் செந்தார்க் 
5
கிளியோர் அன்ன கிளவிப் பணைத்தோள் 
    
பாவை அன்ன வனப்பினள் இவளெனக் 
    
காமர் நெஞ்சமொடு பலபா ராட்டி 
    
யாய்மறப்பு அறியா மடந்தை 
    
தேமறப்பு அறியாக் கமழ்கூந் தலளே. 

    (சொ - ள்.) தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலள் - அகிலின் நெய்பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள்தான் பருவம் உடையள் ஆயினமையால்; நீள் மலைக்கலித்த பெருங்கோல் குறிஞ்சி நாள் மலர் புரையும் மேனி - நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெருஞ்சுனை மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழைக் கண் - பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற்போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயில் ஓர் அன்ன சாயல் - மயிலின் ஒருதன்மையொத்த சாயலையும்; செந்தார்க் கிளி ஓர் அன்ன கிளவி - கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒருதன்மையொத்த சொல்லையும்; பணைத்தோள் - பருத்த தோளையும்; பாவை அன்ன வனப்பினள் - கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடையவள்; இவள் எனக் காமர் நெஞ்சமொடு பல பாராட்டி - இவளென்று விருப்பம் வரும் உள்ளத்துடனே பலபடியாகப் புகழ்ந்து கூறி; யாய் மறப்பு அறியா மடந்தை - எம் தாய் சிறிதும் மறக்கப்படாத மடந்தையாயிராநின்றாள் ஆதலின் இவளது ஆற்றாமை தீரக் கூட்டுவிப்பதை அறியின் அவ்வன்னை எத்தன்மையள் ஆவளோ? இதற்கு யான் அஞ்சுகின்றேன்; எ - று.

    (வி - ம்.) தேம் - அகிலினெய். செந்தார் - கழுத்திலிட்ட வரை. தலைமகள் பருவமெய்திக் கதிர்ப்புக்கொண்டதனை நோக்கினமையின் புறத்தேபோனால் முருகு அணங்குமோவென்று அன்னை ஒழியாது கருதுபவள் ஆதலின், யாய்மறப்பறியா மடந்தையென்றாள். மெய்ப்பாடு - பிறன்கண்தோன்றிய வருத்தம்பற்றிய அவலம். பயன் - தானே கூறி ஆறுதல்.

    (பெரு - ரை.) "நீண்மலை" என்பது தொடங்கி "வனப்பினள்" என்னுந் துணையும் தோழி தாயின் பாராட்டுரையைக் கேட்டிருந்தவள் அவற்றைக் கொண்டு கூறினள்.

(301)