(து - ம்.) என்பது, கார்காலம் வரும்பொழுது வருவேனென்று கூறி வினைவயிற் சென்ற தலைமகன் முன்பு கூறிய பருவம்வந்து நீங்குமளவும் வாராமையாலே தலைமகள் நெஞ்சழிந்து சுரநெறியேகிய நம் காதலர் கொன்றைகள் மலர்ந்து கார்காலஞ் செய்ததனை அறிந்திலராயினும், புதர்தொறும் மலர்ந்த எறுழமலர் வெண்ணிறம் பெறுகின்ற கூதிர்க்காலத்தையும் அவர் அறிந்திலரோவென நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "அவனறிவு ஆற்ற அறியும்" (தொல். கற். 6) என்னும் நூற்பாவிற் 'பல்வேறு நிலை' என்பதனாற் கொள்க.
| இழையணி மகளிரின் விழைதகப் பூத்த |
| நீடுசுரி இணர சுடர்வீக் கொன்றைக் |
| காடுகவின் பூத்த ஆயினும் நன்றும் |
| வருமழைக் கெதிரிய மணிநிற இரும்புதல் |
5 | நரைநிறம் படுத்த நல்லிணர்த் தெறுழ்வீ |
| தாஅந் தேரலர் கொல்லோ சேய்நாட்டுக் |
| களிறுதைத்து ஆடிய கவிழ்கண் இடுநீறு |
| வெளிறில் காழ வேலம் நீடிய |
| பழங்கண் முதுநெறி மறைக்கும் |
10 | வழங்கருங் கானம் இறந்திசி னோரே. |
(சொ - ள்.) சேய் நாட்டுக் களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு - வேற்று நாட்டிலே களிறு காலால் உதைத்துப் போகட்டு ஒழிந்த மேல் கீழாகப் படிந்த மிக்க புழுதி; வெளிறுஇல் காழ வேலம் நீடிய பழங்கண் முதுநெறி மறைக்கும் - வெளிறு இன்றி வயிரமேறிய வேலமரங்கள் நெருங்கிய செல்லுவோருக்குத் துன்பஞ் செய்தலையுடைய முதிர்ந்த நெறியை மறையாநிற்கும்; வழங்கு அருங் கானம் இறந்திசினோர் - மக்கள் நடத்தற்கரிய சுரநெறியின்கண்ணே சென்ற தலைவர்; இழை அணி மகளிரின் விழை தகப்பூத்த நீடு சுரி இணர சுடர்வீக் கொன்றைக் காடு கவின் பூத்த ஆயினும் - பொன்னாலாகிய கலன்களை மிக அணிந்த மகளிர்போல யாவரும் விரும்பும் வண்ணம் மலர் விரிந்த நீண்ட சுரிந்த பூங்கொத்தில் உள்ள விளங்குகின்ற பூவையுடைய கொன்றைக்காடு அழகு மிக்கிருந்த அதனை அறிந்திலரேனும்; நன்றும் வரும் மழைக்கு எதிரிய மணி நிற இரும்புதல் - பெரிதும் வருகின்ற மழையை நோக்கி மலர்ந்த நீலமணியின் நிறம் போன்ற கரிய புதர்களிலுள்ள; நல் இணர்த்து