(து - ம்,) என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன் மீண்டு தலைமகள்பால் வருதலும் அவள் சினமிகுதலாலே அதனை நீக்கும் வழியின்றி நின்றபொழுது அவனது இளமை முதிர்ந்த காமக் கிழத்தி தலைவியை வெகுளாதபடி கூறி உடன்படுத்துகின்றாள், 'துறைவனே! பருவஞ் சென்ற பின்னன்றோ என் போல இவளும் நின்னாலே கைவிடத்தக்கா'ளென உள்ளுறையாலும், 'நீ ஒழுங்காக ஆராய்ந்து குற்றம் வாராது நடவாயெனின் நின்னை விரும்பியோர் தீயிடைப்பட்ட மலர்போல்வ'ரென, வெளிப்படையாலுங் கடிந்து கூறி ஊடலைத் தீர்த்துக் கூட்டா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, "காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின், தாய்போற் றழீஇக் கழறியம் மனைவியைக், காய்வின் றவன்வயின் பொருத்தற் கண்ணும்" (தொல். கற். 10) என்னும் விதிகொள்க.