(வி - ம்.) படுசினை - தாழ்ந்த கிளை. வேறுணர்தல் - புலியொடு பொருததோவென உணர்தல். புன்தலை - மெல்லிய தலையுமாம்.
இறைச்சி:- களிறு வேறொன்றனைக் கருதித் தாழ்த்தமையால் அதனை மாறுபாடாக வுணர்ந்து பிடியானை புலம்புமென்றது, நீயிர் சென்ற இடத்துத் தாழ்ப்பின் இவள் புலம்பி இறந்துபடும் என்றதாம்.
மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.
(பெரு - ரை.) வேறுணர்தல் - பிறிதொரு பிடியை உள்ளித் தன்னைப் பிரிந்து செல்ல முயல்கின்றதோ என்று கருதி என்னல் சிறப்பு. அறி - அறிவு. பிறிது அறிவு இடையிடுதலாவது, மற்றொன்றனைக் கருத்திற் கோடல். "பிறிதோர் ஆறு இடையிட்ட அளவை" என்றும் பாடம். இஃதே சிறந்த பாடமுமாம். இதற்கு மிசைக் கொண்ட யானை அத்தொழிலைவிட்டுப் பிறிதொரு வழியிற் செல்லத் தொடங்கிய அளவிலே என்க.
(318)