பக்கம் எண் :


543


மெல்லிய பருத்த தோளையுமுடைய மடப்பமிக்க இளமடந்தையினது; சுணங்கு அணி வனமுலை முயங்கல் உள்ளி - தேமல் படர்ந்த அழகிய கொங்கையை முயங்குதல் கருதி; மீன் கண்துஞ்சும் பொழுதும் யான் கண்துஞ்சிலேன் - மீன்கள் உறங்கும் இராப்பொழுதெல்லாம் யான் கண் உறங்கிலன்; நிலை யாது - ஆதலின் இனி என் நிலை எத்தன்மையதாய் முடியுமோ? அறிந்திலேன்; எ - று.

     (வி - ம்.) ஓவின்று - ஓவிற்று; நீங்கிற்று. இரவு நடுயாமத்துக் கடலோசை அடங்குதல் வழக்கு. தௌவெனல் - பொலிவு அழிதல். ஊதையும் என்றதன் உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) உரையாசிரியர் கருத்திற்கு ஊதையும் என்புழி உம்மையைப் பிரித்துக் கானலும் என இயைத்துக் கொள்க. தௌவெனல் - ஓசைக் குறிப்பாகக்கொண்டு ஊதையும் கானலின்கண் 'தௌ தௌ' என்று ஒலியா நின்றது என்று பொருள் கோடலே அழகாம். இது 'தவ் என்று' எனவும் வரும்; இங்ஙனமே பாடவேற்றுமையும் உண்டு. "தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப" என்றார் நெடுநல்வாடையினும் (185). இனி மீன்கள் நொடிப்பொழுது உறங்கி ஞெரேலென விழிக்கும் இயல்புடையன என்னுங் கருத்தால் நொடிப் பொழுதேனும் கண்ணுறங்கிலேன் என்பான் மீன்கண் துஞ்சும் பொழுதும் யான் கண்துஞ்சிலேன் என்றான் என்று கோடலே நன்று. உம்மை இழிவு சிறப்பு.

(319)
  
    திணை : மருதம்.

     துறை : இது, பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப நெருங்கிச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன் அவளை நீங்கிப் புதிய ஒரு பரத்தையிடம் புகுந்ததனாலே, அதனை யறிந்த முதற்பரத்தை சினந்து தனக்குப் பாங்காயினார்க்குச் சொல்லுவாள் போல, இறைமகன் கேட்கும் வண்ணம் நெருங்கி நின்று 'திருவிழாவு மில்லாத இக் காலத்தில் இவனாலே காதலிக்கப்பட்ட இவள் தன்னைப் புனைந்து கொண்டு தெருவிலே சென்றதற்கு ஊரொருங்கு நகை செய்ததன்றிக் குலமடமாதரும் தம்தம் கொழுநரைக் காத்துக்கொண்டனர;் அங்ஙனமாக இவனை இவள் பற்றிக்கொண்டது அரிதொன்று அன்'றென இகழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்" (தொல். கற். 10) என்னும் விதிகொள்க.

    
விழவும் உழந்தன்று முழவுந் தூங்கின்று 
    
எவன்குறித் தனள்கொல் என்றி யாயின் 
    
தழையணிந்து அலமரும் அல்குல் தெருவின்