புருவை பாடு இன் தெள் மணித் தோடு தலைப் பெயர - சிவந்த நிலத்தையுடைய காட்டின்கண்ணே சிறிய மயிரையுடைய யாடுகளின் தெளிந்த ஓசையினிய மணிகளைக் கழுத்திலே பூட்டப்பட்ட கூட்டமெல்லாம் தாம் மேய்வதையொழித்துத் தொழுவம் புகுமாறு பெயராநிற்ப; கான முல்லைக் கயவாய் அலரி சாரல் புறத்துப் பார்ப்பனமகளிர் அணிய - கானத்தின்கண் உள்ள முல்லையின் அகன்ற வாயையுடைய மலரைச் சாரலின் புறத்து உள்ள பார்ப்பன மகளிர் பறித்துச் சூடாநிற்ப; சுடர் கல்சேரும் கதிர் மாய் மாலை - ஆதித்த மண்டிலம் அத்தமனக் குன்றை அடைகின்ற ஒளி மழுங்கிய மாலைப் பொழுதில்; புல் என் வறு மனை நோக்கி மெல்ல வருந்துங்கொல் - யான் இல்லாமையால் புல்லென்ற வறுவிய மாளிகையை நோக்கி மெல்ல வருந்தாநிற்பளோ?; தேர் வல்லைக் கடவு - பாகனே! நமது தேரை விரைவிலே செலுத்திக் காண்!; குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற - சென்று அழகிய குருந்து மலர்கின்ற காட்டின்கண்ணே நெருங்குதலும்; பெருங் கலி மூதூர் மரந் தோன்றும் சென்றிக - பெரிய ஒலியையுடைய நம்மூரின் மரங்கள் தோன்றா நிற்கும் ஆதலின் நின்தேர் விரைவிலே செல்லுவதாக!; எ - று.
(வி - ம்.) புருவை - யாடு. கயவாய் - அகன்ற வாய். சென்றிக: செல்கவென்னும் வியங்கோள் வினைத்திரிசொல். குறும்பொறை - காடு.
மரந்தோன்று மென்றதனால் ஊரின் அணிமை கூறினான். பார்ப்பன மகளிர் அங்கி வளர்க்குங் கேள்வரையுடைமையிற் பிரியப் பெறாராதலின், அம் மகளிர் மலரணிந்தமை கூறுமுகத்தால் அவர் போலக் காதலியும் பிரியாது உறையக் கருதுமேயென்று குறிப்பித்தான். மெய்ப்பாடு - உவகை. பயன் - கேட்டபாகன் தேர்கடாவல்.
(பெரு - ரை.) ஊர்க்கு அண்மையில் வந்துவிட்டோம் என்பான் எதிர்தோன்றும் குருந்தவிழ் குறும்பொறை காட்டி அதனை எய்தின் நம்மூதூர் மரந்தோன்றுங்காண்? என்றான். கார்ப்பருவத்து முதல் நாள் கல்சுடர் சேரும் கதிர் மாய் மாலை யான் நின்னை மீண்டும் வந்தெய்துவேன் என்று பண்டு் காதலிக்குக் கூறிவந்தமை பாகனுக்குத் தோன்றுதற்பொருட்டு மாலையில் அவள் வறுமனை நோக்கும் என்றான். ஈண்டுத் தலைவன் பார்ப்பனத் தலைவன் என்பதும் அவன் சென்றவினை தூது என்பதும் அவன் கூற்றாக வருகின்ற 'சாரல் புறத்துப் பார்ப்பன மகளிர் முல்லை அணிவர்' என்பது உணர்த்தும்.
(321)
சேந்தன் கொற்றனார்
திணை : குறிஞ்சி.
துறை : (1) இது, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.