பக்கம் எண் :


570


அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியுமாம்.

    
பிணர்ச்சுவல் பன்றி தோன்முலைப் பிணவொடு 
    
கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின் 
    
கல்லதர் அரும்புழை அல்கிக் கானவன் 
    
வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றைப் 
5
புனையிருங் கதுப்பின் மனையோள் கெண்டிக் 
    
குடிமுறை பகுக்கும் நெடுமலை நாட 
    
உரவுச்சின வேழம் உறுபுலி பார்க்கும் 
    
இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின் 
    
ஈரளைப் புற்றங் காரென முற்றி 
10
இரைதேர் எண்கினம் அகழும் 
    
வரைசேர் சிறுநெறி வாரா தீமே. 

     (சொ - ள்.) பிணர்ச் சுவல் பன்றி - சிலிர்த்த மயிர் மிக்க பிடரினையுடைய ஆண்பன்றி; தோல் முலைப் பிணவொடு கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின் - தோலாய் வற்றிய கொங்கையையுடைய பெண்பன்றியுடனே சென்று திரண்ட அடித்தண்டுடைய தினைக் கதிரை அளவின்றித் தின்றழித்ததனாலே; கானவன் கல் அதர் அரும்புழை அல்கி - கானவன் மலைவழியிலுள்ள செல்லுதற்கரிய சிறிய புழையருகிலே பதுங்கியிருந்து; வில்லின் தந்த வெள் கோட்டு ஏற்றை - வில்லினால் எய்து கொன்று தந்த வெளிய கோட்டினையுடைய அவ்வாண் பன்றியை; புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டிக் குடி முறை பகுக்கும் - அலங்கரித்த கரிய கூந்தலையுடைய அவன் மனைவி அறுத்துத் தன்சுற்றமாகிய குடிகள் இருக்குமிடந்தோறுஞ் சென்று பகுத்துக் கொடாநிற்கும்; நெடு மலை நாட - நெடிய மலை நாடனே!; உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும் இரவின் - மிக்க வலிய சினமுடைய களிற்றியானை அங்கு வருகின்ற புலியின் வருகையை எதிர்ப்பார்த்து நிற்கும் இரவின்கண்ணே; அஞ்சாய் - நீ இங்கு வருதலை அஞ்சுகின்றனையல்லை; அஞ்சுவல் - அதனை நினையாமுன் யான் அஞ்சாநிற்பேன்; அரவின் ஈர் அளைப் புற்றம் கார் என முற்றி இரைதேர் எண்கு இனம் அகழும் - ஆதலின் பாம்பு உறைகின்ற ஈரிய புழையையுடைய புற்றை மேகம் போலச் சூழ்ந்துகொண்டு இரையிருப்பதனை யாராய்கின்ற கரடியின் கூட்டம் பறித்து எடாநிற்கும்; வரை சேர் சிறு நெறி வாராதீம்-மலையையடுத்த சிறிய நெறியில் இனி வாராதொழிவாய்காண்!; எ-று.