நிறம் இன்னும் எப்படியாமோ? என்று கூறினாள்; தோலாக் காதலர் துறந்து நம் அருளார் - ஆதலால் பகைப்புலத்து வென்றி பெறுவதொன்றேயன்றித் தோல்வியுறாத நங் காதலர் நம்மைக் கைவிட்டு இனி அருள் செய்பவரல்லர்; இது அலர்வது அன்று கொல் என்று - அவருடனிகழ்ந்த இக் களவொழுக்கமானது புறத்தார்க்குப் புலனாகி அலர்தூற்றுந் தன்மையை எய்துமன்றோ? என்று; நன்றும் புலரா நெஞ்சமொடு புதுவ கூறி - பெரிதும் வாட்டமுற்று நம்முள்ளத்துடனே புதியனவாய்ச் சிலவற்றைக் கூறி; இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் அறிந்தனள் போலும் - நாம் இருவரும் துன்பவெள்ளத்து நீந்துகின்றதனை அவ்வன்னை அறிந்து கொண்டனள் போலும்; எ - று.
புதுவகூறியது அவர் அருளாதகலினும், முன்புள்ள நிகழ்ச்சியாலும் மெய்வேறுபாட்டாலும் அலரெழுமே யென்று நெஞ்சினுள்ளே மந்தணமாக மொழிந்துகொண்டது. இதனை அன்னை கரந்து நின்று கேட்டறிந்து பின்பு மாலைகலைந்து தோற்றமும் வேறுபட்டிருப்பதைக் கண்டு இவள் ஒரு கணவனொடு கலந்தனள் போலுமென்று உட்கொண்டு இவ்வேறுபாடு எற்றினானாயிற் றென்றாட்குச் சுனையாடியதால் ஆயதென்றலும் நாளையும் அச்சுனையினாடினால் இன்னும் வேறுபாடு மற்றொருவிதமு மாகுமென நகைத்துக் கூறினாளென்பதாயிற்று. இதனால் அன்னை அறிந்தனள் போலுமென்றாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.
(பெரு - ரை.) இனி இச்செய்யுளில் 'அன்னையானவள், நின்தோழி சூடிய மாலை . . . . . வினவ' என்றும் 'யானும் . . . . கூறினேனாக' என எச்சப்பொருள் கோடல் மிகையாம். அன்னை வந்து என்னை முயங்கி ஈரிதழ்த் தொடையல் நீர் அலையின் கண் கலையும்படி (மெலிந்துள்ள) அவளுடைய பெதும்பை நன்னலத்தை இவள் பெறும்படி நாளைச் சுனையாடுதி! அங்ஙனம் ஆடி நலம் பெறல் மகளிர் பண்பு என்று எனக்கறிவுறுத்தாள் எனவே அவள் நாம் நீந்தும் பருவரல் வெள்ளத்தை அறிந்தனள் போலும் என்று முடிப்பதே சாலும் என்க.