புலந்தேனும் இல்லேன்' என நொந்து கூறி அவர் மீதூர்தலின் முயங்கா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, ஆற்றாமையும் வாயிலே யாகலின் "வாயிலின் வரும் வகை" (தொல். கற். 6) என்னும் விதிகொள்க.
| புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன் |
| கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் |
| படைமாண் பெருங்குளம் மடைநீர் விட்டெனக் |
| காலணைந்து எதிரிய கணைக்கோட்டு வாளை |
5 | அள்ளலங் கழனி உள்வாய் ஓடிப் |
| பகடுசேறு உதைத்த புள்ளிவெண் புறத்துச் |
| செஞ்சால் உழவர் கோற்புடை மதரிப் |
| பைங்கால் செறுவின் அணைமுதற் புரளும் |
| வாணன் சிறுகுடி அன்னஎன் |
10 | கோல்நேர் எல்வளை நெகிழ்த்த நும்மே. |
(சொ - ள்.) மகிழ்ந கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன் படை மாண் பெருங்குளம் மடை நீர் விட்டு என - மகிழ்நனே! பாகன் கூறு மொழிக் குறிப்பன்றிப் பிறவற்றைக் கற்றறியாத யானையையும் விரைந்து செல்லுந் தேரினையும் உடைய செழியன் பெயராலே செய்த மாட்சிமைப்பட்ட பெரிய குளத்து நீர் மடையடைத்திருந்தது திறந்துகொண்டோடியதனாலே; கால் அணைந்து எதிரிய கணைக்கோட்டு வாளை - அக்குளத்தினின்றும் புறம்போந்து கால்வாயை யடைந்து சென்று திரும்பிய திரண்ட கோட்டினையுடைய வாளைமீன்; அள்ளல் கழனியுள்வாய் ஓடி - அக் கால்வாயினின்றும் சேற்றையுடைய வயலினுள்ளாலோடி; பகடு சேறு உதைத்த புள்ளி வெள் புறத்துச் செஞ்சால் உழவர் கோல்புடை மதரி - ஆங்கு உழுது வருகின்ற எருமைக்கடாவின் காற்சேறுபட்ட புள்ளியுடைய வெளிய மேற் புறத்தோடு செவ்விய பலபடியாக மறித்து உழுகின்ற உழவர் தங் கைக்கோல் கொண்டு புடைத்தற்கும் அஞ்சாது பெருக்குற்று; பைங்கால் செறுவின் அணைமுதல் புரளும் - நீர் பொருந்திய சேற்றின்மேல் வரம்படியிலோடி அப்பாற் போக இயலாமையால் அவ்வரம்படியிலே புரளுகின்ற; வாணன் சிறுகுடி அன்ன - வாணனது காவிரியின் வடபாலுள்ள 'சிறுகுடி' என்னும் ஊர்போன்ற; என் கோல் நேர் எல்வளை நெகிழ்த்த நும் - என்னுடைய கோற்றொழிலமைந்த அழகிய ஒளி பொருந்திய வளை நெகிழும்படி செய்த நின்னை; புல்லேன் - புல்லவுஞ்செய்யேன்; புலத்தலும் இல்லேன் - அதனால் நின்னை வெறுத்தேனுமல்லேன்; அயலாந் தன்மையேனாதலின் என்னைத் தீண்டாதேகொள்! எ - று.