பக்கம் எண் :


579


    (சொ - ள்.) மடந்தை வங்க வரிப் பாறைச் சிறு பாடு முணையின் - இங்கு ஒரு குன்றின்மேற் காணப்படு மடந்தை வெள்ளி போன்ற வரிகளையுடைய கற்பாறையிலே விழும் அருவியாடி அதிற் சிறிது வெறுப்படையின்; செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் விளையாடு இன் நகை அழுங்காப் பால்மடுத்து - சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினாலாக்கிய வட்டைச் சாடியின்வாயில் வைத்து அதன் நாவினால் காய்ச்சி வடிக்கப்படுகிற விளையாடும் இனிய மகிழ்ச்சி நீங்கப்பெறாத கள்ளின் தெளிவை (சாராயத்தை)ப் பருகி; உலையா உலவை ஓச்சிச் சில கிளையா - அதன் மயக்கம் மிகுதலாலே சுழன்றோடி வந்து மரக்கொம்பினையொடித்து ஓங்கிக் காட்டிச் சில வார்த்தையைக் கூறி; குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் துணை நன்கு உடையள் - குன்றகத்துள்ள தன் காதலனாகிய குறவனொடு சிறிய நொடி பயிற்றுகின்ற நல்ல துணையுடையளாயிராநின்றாள்; யாம் அரு வெம் பகைமுனை - இங்ஙனம் எம்மோடு எம் காதலி கள்ளின் தெளிவைப் பருகிக் குறு நொடி பயிற்றி மகிழாவாறு யாம் நெருங்குதற்கரிய கொடிய பகைவர் முன்னிலையிலே; தண் பெயல் பொழிந்தென நீர் ஈர்ங் கரை நாள் - குளிர்ந்த மழை பெய்தலினால் நீர்மிக்க ஈரிய கான்யாற்றங்கரையில் நாட்காலையிலே; கூதிரொடு வேறுபுல வாடை அலைப்ப மயங்கி - கூதிரொடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்தலானே மயங்கி; துணை இலேம் தமியேம் பாசறையேம் - அத் துன்பத்தைப் போக்கவல்ல துணையின்றித் தமியேமாய்ப் பாசறையின்கண் இராநின்றேம்; எ - று.

    (வி - ம்.) வங்கம் - வெள்ளி. நா - நீர்வடிய விடுதற்கு நாக்குப் போலச் செய்து வைத்திருப்பது. பால் - சாராயத்துக்கொரு பெயர்; கள்ளை மரத்துப் பாலெனக் கூறும் வழக்குண்மையின் அறிக. குறவனொடு நொடி பயிற்றலும் பிறவுங் கணவனைப் பிரிந்தார்க் கின்மையின் ஈண்டுத் தன் காதலியைக் கூறியதல்லாமை தெளிக. மெய்ப்பாடு - அழுகை. பயன் - பாசறைப் புலம்பி ஆறதல்.

    (பெரு - ரை.) இச் செய்யுள் தெளிவின்றிக் கிடக்கின்றது. இதன் உரையும் பொருந்திய வுரையாகக் காணப்படவில்லை. மேலும் இச் செய்யுட்கு "வங்கா வரிப் பறைச் சிறுபாடு முனையின்" என்றும் 'அலையா உலவை யோச்சி' என்றும், 'நீர் இரங்கு அரைநாள் மயங்கி' என்றும் பாடவேறுபாடுகளும் உண்டு. இதன்கண் மடந்தை என்றது பிறள் ஒருத்தியை என்று கோடல் சிறப்பாகத் தோன்றவில்லை. ஒருவாறு மடந்தை (தலைவி) யேனும் இல்லத்தின்கண் குன்றக் குறவனொடு நொடிபயிற்றும் துணையுடையள். அஃதாவது நம் குன்றிற்கு உரிமையுடையோனாகிய நம் புதல்வனோடு நொடி பயிற்றும் துணையொன்றைனயுடையள்