நெடுங்காலம் விரும்பாது கைவிடின், அடைக்கலம் புகுந்தார் வாழ்வதெப்படியாகும்? ஆதலின், நீ தெளிவிப்பதொழிக, இவள் தான் படுந் துன்பம் படுவாளாகவென்று கடிந்துகூறி விலக்காநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்" (தொல். கள. 23) என்புழி, பாங்கின்கண்ணும் என்பதனாற் கொள்க.
| கானல் கண்டல் கழன்றுகு பைங்காய் |
| நீல்நிற இருங்கழி உட்பட வீழ்ந்தென |
| உறுகால் தூக்கத் தூங்கி ஆம்பல் |
| சிறுவெண் காக்கை ஆவித்து அன்ன |
5 | வெளிய விரியும் துறைவ என்றும் |
| அளிய பெரிய கேண்மை நும்போல் |
| சால்பெதிர் கொண்ட செம்மை யோருந் |
| தேறா நெஞ்சங் கையறுபு வாட |
| நீடின்று விரும்பா ராயின் |
10 | வாழ்தல்மற் றெவனோ தேய்கமா தெளிவே. |
(சொ - ள்.) உறு கால் தூக்க கானல் கண்டல் கழன்று உகு பைங்காய் - மிக்க காற்று மோதுதலானே கடற்கரைச் சோலையிலுள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்ற பசிய காய்; நீல் நிற இருங்கழி உள்பட வீழ்ந்தென - நீல நிறத்தையுடைய பெரிய கழியிடத்து உள்ளே சென்று பொருந்தும்படி விழுதலாலே; ஆம்பல் தூங்கிச் சிறு வெள் காக்கை ஆவித்து அன்ன வெளிய விரியும் துறைவ - அது மோதப்பட்டு ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெளிய நீர்க்காக்கை கொட்டாவி விட்டாற் போன்ற வெளியவாய் மலராநிற்கும் துறைவனே!; என்றும் அளிய பெரிய கேண்மை நும்போல் சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் - எக் காலத்தும் கருணை செய்தலையுடைய பெரிய கேண்மையுடைய நும்மைப் போலச் சால்பினை எதிரேற்றுக்கொண்ட செம்மையுடையாரும்; தேறா நெஞ்சம் கை அறுபு வாட நீடு இன்று விரும்பாராயின் - தம்மை அடைந்தாரைப் பாதுகாப்பேமென்று அரிய சூள்வைத்து அவர் தெளியாத நெஞ்சுடனே செயலழிந்து வாடும்படி நெடுநாள் காறும் விரும்பாதிருப்பாராயின்; வாழ்தல் எவன் - அங்ஙனம் தஞ்சமென்று புகுந்தார் தாம் உயிர்வாழ்வது எவ்வாறோ?; தெளிவு தேய்க - நீ இங்கு நயந்து தெளிவிக்கும் தெளிவு முழுவதூஉம் அழிந் தொழிவதாக; இவள் தான் படுகின்ற துன்பமெல்லாம் நுகர்ந்து அழிவாளாக! எ - று.
(வி - ம்.)துறைவ நும்போலென்றது ஒருமை பன்மை மயக்கம்.