பக்கம் எண் :


590


விரும்பி யொழுகும் பெண் வண்டுடனே ஆண்வண்டுகள் ஒலி செய்யாநின்றன; யான் புனை இழை நெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு கனை இருங் கங்குலும் கண்படை இலென் - இன்னதொரு பொழுதிலே யானொருத்தியே அணிந்த கலன்களை நெகிழ விடுத்த தனிமையுடனே கொண்ட வருத்தத்தொடு மிக்க நீடிய கங்குல் முழுவதும் கண்கள் துயின்றிலேன்; அதனால் - ஆதலின் இங்ஙனம் எல்லார் செயலுக்கும் மாறுபாடாக யானிருத்தலால்; இவ் உலகம் என்னொடு பொருங்கொல் - இவ்வுலகம் என்னொடு போர் செய்து என்னை ஒழியப் பண்ணுமோ?; என் அவலம் உறும் நெஞ்சு - அன்றி யாதொரு பயனுமில்லாத எனது நெஞ்சம்; உலகமொடு பொருங்கொல் - தன் செயலுக்கு மாறுபாடாயிராநின்றது இவ்வுலகம் என்று உலகத்தோடு போர் செய்ய எழுமோ? ஒன்றுந் தோன்ற வில்லையே? எ - று.

     (வி - ம்.) யானே, ஏ : பிரிநிலை. நிலனே, ஊரே, கானே, ஏ : வினா. கான் வண்டு இமிருமென்றது, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது.

     நிலவின் குளிர்ந்த கதிர் மேலே படுதலும் காமவேட்கை மீதூர்தலின், நிலாவை முதலிலே கூறினாள். விழாக்கண்டு மகிழ்தல் கூடினார்க்கன்றிப் பிரிந்தார்க் கின்பஞ் செய்யாமையின், ஏனையோர் மகிழ்வதற்கும் தான் வருந்துவதற்குங் காரணமாகிய திருவிழாவை உடன் கூறினாள். உண்பார் முன் நிலையிலே பசியால் நொந்திருந்தார் நெஞ்சம் புண்ணாகி அழியுமன்றே! அவ்வண்ணம் துணையோடு வண்டு இமிர்தலை நோக்கவும் காமங் கனற்றலானே வருந்தி்க் கண்படை கொள்ளாமை கூறினாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) நிலன் முதலியவற்றில் ஏகாரம் அசைநிலையுமாம். நீல் - நீலம் என்பது குறைந்து நின்றது. ஒலிவரும் - ஒருசொல்.

(348)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, தலைமகன் தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.

     (து - ம்.)என்பது, களவொழுக்கத்துப் பாங்கி மதியுடன்பாட்டின்கண் முன்னுறன் முதலாகிய மூவகையானும் தோழி மதியுடன்படுக்கின்றாள்; இவன் ஒரு குறையுடையான்போலும். அக் குறையும் இவள்கண்ணதேயென ஆராயுங்காலை அதுகாறும் பொறானாய் அவள் அறிந்து தன் குறையை விரைவிலே முடிக்குமாறு யாம் கொய்தும் தூக்கியும் குற்றும் நாள்தோறும் இவ்வண்ணம் குற்றேவன்மாக்கள் போலா யிருப்பவும் பின்நிற்றலை வெறாத நம்பால் பரதவர்மகள் எவ்வாறு கருதியிருக்குமோ என்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "ஊரும் பெயரும் . . . . தோழியைக் குறையுறும் பகுதியும்" (தொல். கள. 11) என்பதனால் அமைத்துக் கொள்க.