பக்கம் எண் :


591


    
கடுந்தேர் ஏறியுங் காலின் சென்றும் 
    
கொடுங்கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும் 
    
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும் 
    
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு 
5
வைகலும் இனையம் ஆகவுஞ் செய்தார்ப் 
    
பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை 
    
ஒளிறுவேல் அழுவத்துக் களிறுபடப் பொருத  
    
பெரும்புண் உறுநர்க்குப் பேஎய் போலப் 
    
பின்நிலை முனியா நம்வயின் 
10
என்னென நினையுங்கொல் பரதவர் மகளே. 

     (சொ - ள்.) கடுந் தேர் ஏறியும் காலின் சென்றும் - விரைந்த செலவினையுடைய தேரிலேறிச் சென்றும் பின்பு காலால் நடந்து சென்றும் இவளுக்கு ஏவல் செய்து ஒழுகுபவனாகி; கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் - வளைந்த கழியருகினுள்ள அடும்பின் மலரைப் பறித்தும்; கைதை தூக்கியும் - தாழம் பூவைப் பறிக்குமாறு இவளைத் தூக்கிநின்றும்; நெய்தல் குற்றும் - தழையுடை புனையவேண்டி நெய்தலந்தளிரையும், சூட அதன் மலரையுங் கொய்து கொடுத்தும்; புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு வைகலும் இனையம் ஆகவும் - நாம் காதலியை முயங்கினாம் போலக் கருதிய உள்ளத்துடனே நாள்தோறும் இத்தன்மையேமாய் இராநிற்கவும்; செய் தார்ப் பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை - புனைந்த மாலையணிந்த பசிய பூணையுடைய அரசர்கள் போரிலே மடிந்த பாசறையின் கண்ணே; ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத பெரும்புண் உறுநர்க்கு - விளங்குகின்ற படைக்கடலிலே களிற்று யானை படுமாறு போர் செய்தலானாகிய பெரிய புண்ணுற்றுக் கிடந்தாரை; பேஎய் போல - வேறு காப்போர் இன்மையால் அவருடைய உயிர் போமளவும் ஓரியும் பாறும் நரியும் கடித்து அவர் தசையைக் கொள்ளுமேயென்று இரக்கமுற்றுப் பேய் தானே காத்து நின்றாற்போல; பின் நிலை முனியா நம்வயின் - இத்தோழியின் பின்னின்று இவள் ஆராயுமளவும் வெறுப்படையாது திரிகின்ற நம்மிடத்து; பரதவர் மகள் என் என நினையும் - நம்காதலியாகிய பரதவர் மகள் எவ்வண்ணம் மாறுபாடாகக் கருதி யிருக்கின்றனளோ?; எ - று.

     (வி - ம்.) புண்பட்டாரைக் காப்போரின்மையின் அவருயிர் போமளவும் பேய் அருகிருந்து காப்பதுபோல இவள் ஆராய்ந்து கூறுங்காறும் பின்னே திரிந்து காத்து நின்றேனென்க. இது பேய்க்காஞ்சித் துறை. "ஏமச் சுற்ற மின்றிப் புண்ணோன், பேஎய் ஓம்பிய பேஎய்ப்பக்கமும்" (தொல். பொ. சூ. 79) என்பதனானறிக.