(து - ம்.) என்பது, மணமனையின் மற்றைநாள் செவிலியொடு புகுந்த தோழியை 'நீ நன்றாக இறைமகளை ஆற்றியிருந்தா'யென்று தலைமகன் புகழ்தலும் 'நீ கொண்ட கேண்மை எங்குங் கௌவையாகியது; அதனை நின் காதலியே பொறையொடு நீ வாராமையாலுண்டாகிய தனது காம நோயையும் ஆற்றியிருந்ததன்றி யான் ஆற்றுவிக்குமாறு கிடந்ததென்னை' யென்று தோழி மறுத்துக் கூறாநிற்பது மாகும்.
(இ - ம்.) இதற்கு, "பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.
| தானது பொறுத்தல் யாவது கானல் |
| ஆடரை ஒழித்த நீடிரும் பெண்ணை |
| வீழ்கா வோலைச் சூழ்சிறை யாத்த |
| கானல் நண்ணிய வார்மணல் முன்றில் |
5 | எல்லி அன்ன இருள்நிறப் புன்னை |
| நல்லரை முழுமுதல் அவ்வயின் தொடுத்த |
| தூங்கல் அம்பித் தூவலஞ் சேர்ப்பின் |
| கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு |
| நெடுநெறி ஒழுகை நிரைசெலப் பார்ப்போர் |
10 | அளம்போகு ஆகுலங் கடுப்பக் |
| கௌவையா கின்றது ஐயநின் நட்பே. |
(சொ - ள்.) ஐய கானல் ஆடு அரை ஒழித்த நீடு இரும்பெண்ணை வீழ் கா ஓலைச் சூழ் சிறை யாத்த - ஐயனே! கழிச்சோலையிடத்துக் காற்றாலசைகின்ற அடியில் உள்ளவற்றை வெட்டி ஒழித்தலானே நெடிய கரிய பனையினின்று விழுகின்ற காவிக் கொணர்ந்த ஓலையைச் சூழ்கின்ற வேலியில் மறைபடக்கட்டிய; கானல் நண்ணிய வார்மணல் முன்றில் - கடற்கரைச் சோலையையடுத்த வெளிய மணலையுடைய முன்றிலின்கண்ணே; எல்லி அன்ன இருள் நிறப் புன்னை நல் அரை முழுமுதல் அவ்வயின் தொடுத்த - இரவு போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னையின் நல்ல பெரிய அடிமரத்திலே பிணித்துக்கிடத்தலானே; தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின் - தங்குதல் கொண்ட தோணியையுடைய நீர்த்துவலை தெறித்துவிழும் கடற்கரையிடத்தே; கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு நெடுநெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர் - கடுகிய வெயிலினாற் கொதிக்கின்ற கல்லாக விளைந்த உப்புக்களை ஏற்றி நீண்ட நெறியிலே செலுத்தும் பண்டிகள் நிரையாகச் செறிந்து செல்லுமாறு உரப்பி