(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் கொள்க.
| புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை |
| முலைவாய் உறுக்குங் கைபோல் காந்தள் |
| குலைவாய் தோயுங் கொழுமடல் வாழை |
| அம்மடற் பட்ட அருவித் தீநீர் |
5 | செம்முக மந்தி ஆரும் நாட |
| முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் |
| நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் |
| அஞ்சில் ஓதியென் தோழி தோள்துயில் |
| நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அதுநீ |
10 | என்கண் ஓடி அளிமதி |
| நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே. |
(சொ - ள்.) புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை முலைவாய் உறுக்கும் கைபோல் - புதல்வனைப் பெற்ற நீலமலர் போன்ற கண்ணையுடைய மடந்தை தன் கொங்கையைக் கையாலே பிடித்துத் தன் புதல்வன் வாயில் வைப்ப அக் குழந்தை அதன்கணுள்ள பாலைப் பருகுவதுபோல; காந்தள் குலைவாய் தோயும் கொழுமடல் வாழை - காந்தளின் பூக்கொத்தொடு பொருந்திய கொழுவிய மடலையுடைய வாழைப்பூவின்; அம் மடல் பட்ட அருவித் தீ நீர் செம்முக மந்தி ஆரும் நாட - அந்த மடலுட்பட்ட அருவி போலப் பெருகிவரும் இனிய நீரைச் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கு பற்றிப் பருகா நிற்கும் மலைநாடனே!; நட்டோர் முந்தை இருந்து கொடுப்பின் - நட்புடையாளர் கண்ணோட்டமுடையார்க்கு எதிரே சென்றிருந்து 'இதனை நீயிர் உண்பீராக!' என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும்; நனி நாகரிகர் நஞ்சும் உண்பர் - நட்பின் மிக்க அக் கண்ணோட்டமுடையார் அது நஞ்செனக் கண்டு வைத்தும் கண் மறுக்கமாட்டாமையின் அதனையுண்டு பின்னும் அவரோடு மேவுவார்; அது நீ அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் நெஞ்சின் இன்புறாய் - நீ அத்தகைய நட்புடையனா யிருந்தும் அழகிய சிலவாய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நின் உள்ளத்து இன்பமாகக் கொண்டாயல்லை; ஆயினும் - அங்ஙனம் கொள்ளாயேயாயினும்; என் கண் ஓடி அளி - என்பால் உள்ள கண்ணோட்டத்தினாலாவது இவளுடைய தோளிலே துயிலுவதனை இன்பமாகக் கொண்டு தலையளி செய்வாயாக!; நின் கண் அல்லது பிறிது யாதும் இலள் - இவள்தான் நின்பால் அடைக்கலமாக உடையள் அல்லது வேறொரு களைகணும் உடையள் அல்லள்காண்; எ - று.