(து - ம்.) என்பது, அறத்தொடு நிற்றலின்பின் மணஞ் செய்து கொள்ளாது தலைவன் பொருள்வயிற் பிரிந்த காலத்துத் தோழி இவள் ஆற்றாளாயினாள்; இவளை இழந்தேனெனக் கவலையுடையளாய் இறைமகளை நெருங்கி நமது கவின் கெடுமாறு பிரிந்துபோகிய தலைவர் முன்பு நின்னை அகன்று போகேன் என்று சூளுரைகூறி அதனை மறந்தனராதலால் 'அது காரணமாக நீ அணங்காதொழி' என்று கடல் தெய்வத்துக்குப் பரவுக்கடன் கொடுப்போம் வாவென அவள் ஆற்றும் வண்ணம் சூழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, 'ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட' (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
துறை : (2) அக்காலத்து ஆற்றாளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉமாம்.