(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனிடத்துத் தலைமகள் சினமுடையளாதலை யறிந்த தோழி, தலைவனை நெருங்கி வலம்வந்து 'எம்பெருமானே ! நீ வெள்கியுற்ற தன்மைக்கு யான் மகிழா நிற்பேன்; இம் மனையின் கண்ணே வந்து துயில்வது பிறிதொரு பொழுதினுங் கைகூடுமாதலால் நேற்று வந்த பரத்தையரின் நலனுண்டு துறந்துவந்த நீ இன்று வரும் பரத்தையரின் நலன் நுகருமாறு செல்வாயாக; நின் பரத்தை சிறப்பெய்துக' என மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்" (தொல். கள. 9.) என்னும் விதிகொள்க.
துறை : (2) தலைமகள் ஊடிச் சொல்லியதூஉமாம்.
(து - ம்.) என்பது, வெளிப்படை.
(உரை இரண்டற்கு மொக்கும்.) (இ - ம்.) இதற்கு, "புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்பு நனிகாட்டி, இயன்ற நெஞ்சுந் தலைப்பெயத்தருக்கி யெதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்" (தொல். கற். 6.) என்னும் விதிகொள்க.
| முழவுமுகம் புலர்ந்து முறையின் ஆடிய |
| விழவொழி களத்த பாவை போல |
| நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வௌவி |
| இன்றுதரு மகளிர் மென்தோள் பெறீஇயர் |
5 | சென்றீ பெரும சிறக்கநின் பரத்தை |
| பல்லோர் பழித்தல் நாணி வல்லே |
| காழிற் குத்திக் கசிந்தவர் அலைப்பக் |
| கையிடை வைத்தது மெய்யிடைத்திமிரும் |
| முனியுடைக் கவளம் போல நனிபெரிது |
10 | உற்றநின் விழுமம் உவப்பேன் |
| மற்றுங் கூடும் மனைமடி துயிலே. |
(சொ - ள்.) பெரும பல்லோர் பழித்தல் நாணி வல்லே - பெருமானே! பலரும் இகழ்ந்து கூறுதல் பொறாது வெள்கி விரைவாக; கசிந்தவர் காழில் குத்தி அலைப்ப - வருந்திய பாகர் இருப்பு முள்ளாலே குத்தி அலைத்தலாலே; கை இடை வைத்தது மெய்யிடைத் திமிரும் முனியுடைக் கவளம் போல - துன்புற்றுத்