(து - ம்.) என்பது, களவின்வழிவந் தொழுகுந் தலைமகன் ஒருசிறை மறைந்து வந்துறைவதனை யறிந்த தோழி, அவன் இதுகேட்டு விரைய வரையுமாறு தலைவியை நெருங்கி அவனது இயல்பை இகழ்கின்றாள், தோழியே! மலைநாடன் சான்றோனல்ல னாதலால் அவனெதிர் சென்று நீ சான்றோயல்லை என்று கூறி வரவேண்டி யாம் நாணமொழிந்து மன்றிலே புகுந்து அவனது ஊரை வினாவி வருவோமோ ஒன்று சொல்லாயென்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.