| அருங்கடி அன்னை காவல் நீவிப் |
| பெருங்கடை இறந்து மன்றம் போகிப் |
| பகலே பலருங் காண வாய்விட்டு |
| அகல்வயல் படப்பை அவனூர் வினவிச் |
5 | சென்மோ வாழி தோழி பல்நாள் |
| கருவி வானம் பெய்யாது ஆயினும் |
| அருவி ஆர்க்கும் அயந்திகழ் சிலம்பின் |
| வான்தோய் மாமலை நாடனைச் |
| சான்றோய் அல்லை என்றனம் வரற்கே. |
(சொ - ள்.) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக! பல்நாள் கருவி வானம் பெய்யாது ஆயினும் அருவி ஆர்க்கும் அயம்திகழ் சிலம்பின் - நெடுநாள் காறும் மின்னல் முதலாகிய தொகுதியையுடைய மேகம் மழை பெய்யா தொழிந்தாலும் அருவியொலி மாறாது பெருகி வருகின்ற நீர் விளங்கிய பக்கமலைகளையுடைய; வான் தோய் மா மலை நாடனை - ஆகாயத்தின் மீதுயர்ந்த பெரிய மலைநாடனை; சான்றோய் அல்லை என்றனம் வரற்கு - நெருங்கி நின்னையடைந்த எம்மை நீ கைவிடுதலானே சால்புடையையல்லை என்று கூறினேமாகி மீண்டு வருதற்கு; அருங் கடி அன்னை காவல் நீவி - அருமையாகிய காவலைச் செய்துடைய அன்னையினது காவல் கடந்து; பெருங் கடை இறந்து மன்றம் போகி - பெரிய தலைக்கடை வாயிலையும் நீங்கி் ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தினை யடைந்து; பகலே பலரும் காண அகல் வயல் படப்பை அவன் ஊர் - பகற் பொழுதிலே பலருங் காணுமாறு யாங் கொண்டிருந்த நாணினை விடுத்து அகன்ற வயல் சூழ்ந்த கொல்லைகளையுடைய அவனது ஊர்; வாய் விட்டு வினவிச் சென்மோ - எவ்விடத்து உளதென்று வாயால் வினவியறிந்து சென்று வருவோமோ? ஒன்று கூறுவாயாக! எ - று.
(வி - ம்.) அயம் - நீர். இன்னான் இன்ன ஊரிலுள்ளான்; அவ்வூர் இன்ன இடத்துளதென்று தகுதிப்பாடுடையாரையும் அவரிருக்கும் ஊரையும் ஊர்ப்பொதுவம்பலத்தின்கண் ஏட்டில் வரைந்துள்ள வழக்குப் பண்டு உள்ளதுபோலும். சான்றோயல்லையென்றது இயற்பழித்துரைத்தல்.
இறைச்சி:- சால்பில்லானது மலையாதலால் பன்னாள்காறும் வானம் பெய்யாதாயினும் அருவிநீர் அறாமல் ஆரவாரியாநின்றது; இஃதென்ன வியப்போ வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) இனி இச் செய்யுளைத் தலைவி கூற்றாகக்கொண்டு "உயிரினுஞ் சிறந்தன்று நாணே . . . . . தோன்றுமன் பொருளே"