இறைச்சிகள் :- (1) மணமில்லாத கரும்பின்மலரை வாடைதீண்டும் என்றது, நெஞ்சே! நிலையில்லாத பொருளை நீ விரும்பி யுலாவுறுகின்றனை யென்றதாம்.
இறைச்சிகள் :- (2) வாடை வீசுதலாலே குருவியின் குடம்பை அசைந்து வருமாறு மூங்கில் சென்று மோதுமென்றது, பொருள்நசை நின்னைத் தூண்டுதலானே யான் வருந்துமாறு நீ என்னைத் துன்புறுத்துகின்றதனை யென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய பிணிபற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.
(பெரு - ரை.) இரும்பல் மெல்லணை - கரிய பலவாகிய மெல்லிய கூந்தலாகிய அணை என்க. "செயற்கரிய செய்வார் பெரியர்" என்பதுபற்றி அரிய கூடியற்றும் குருவியை முதுக்குறைக் குரீஇ என்றான்.
(366)
திணை : முல்லை.
துறை : இது, வரவுமலிந்தது.
(து - ம்.) என்பது, வினைவயிற் பிரிந்த தலைமகன் குறித்த பருவத்து வந்திலனென்று கவன்ற தலைமகளைத் தோழி நெருங்கி, மடந்தாய்! சென்று வினைமுடித்தமையால் உடன்சென்றிருந்த வீரர் பலரும் மலர்சூடி வந்தனர்காண்; நம் காதலரும் இப் பனிக்காலத்து ஆண்டுத் தங்கி வருந்தாது இன்னே வருவரென்று கூறுபவள் உள்ளுறையால் நீ துன்புறாது இல்லறம் நிகழ்த்துவாயாக வென்றும் ஆராய்ந்து கூறாநிற்பது.