மொய்த்த தும்பி - தம்மினமென்று கருதி மொய்த்த வண்டுகள்; பழம் செத்துப் பல் கால் அலவன் கொண்ட கோள் கொள்ளா நரம்பின் கூர்ந்து இமிரும் பூசல் - அதனைக் கனியென வோர்ந்து பலவாகிய கால்களையுடைய ஞெண்டு கைக்கொண்ட கோட்பாட்டினால் அஞ்ஞெண்டை விலக்கித் தாம் வலிந்து கொள்ளப்படாதனவாய் யாழோசைபோல மிக்கு ஒலிக்கும் பெரும் பூசலை; இரைதேர் நாரை எய்திய விடுக்கும் துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் - ஆண்டு இரையைத் தேடுகின்ற நாரை வரக்கண்ட ஞெண்டு கைவிட்டகலா நிற்கும் கடற்றுறை விளங்கிய மாந்தை போன்ற இவளுடைய நலமானது; பண்டும் இற்றே கண்டிசின் - பண்டும் இத்தன்மையதேயாகும் நீ காண்பாயாக !; உழையின் போகாது அளிப்பினும் - இவள்பானின்றும் களவுக் காலத்து விலகாமலிருந்து தலையளி செய்தாலும்; இவள் கண் பசந்தது சிறிய ஞெகிழ்ந்த கவின் நலம் கொல்லோ - இவள் பசப்புற்றதன் காரணம் சிறிதளவு முயக்கம் கை நெகிழ்ந்ததனாற் கெட்ட அழகின் மிகுதியோ?; மகிழ்ந்தோர் கள் கழி நெருக்கத்து அன்ன காமம் கொல் - கள்ளுண்டார்க்குக் கள் அறூஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு போன்ற காம வேறுபாடோ? அவ்விரண்டுமல்லவே; எ - று.
(வி - ம்.)புன்கால் - மெல்லிய காம்பு. செத்து - கருதி. இசின் : முன்னிலையசை. தெய்ய : அசைநிலை யிடைச்சொல். அளிப்பினும் இவள் கண் பசந்தமை கவினலமோ? காமவேறுபாடோ? அவ்விரண்டுமல்ல. பிரிவினாலே பசந்தனகாணென இயைக்க.
எனவே, இஃது ஓரமளிக்கண்ணே துயிலப்பெற்றும் வேதவிதி பற்றிக் கூட்டம் நிகழாமையாற் பிறந்த வேறுபாடன்றோ? இதனை நீயே முயங்கி ஆற்றுவிக்குமாறன்றி, யான் ஆற்றுவிக்குமாறென்னை யென்றாளென்பதாம். வேதவிதி - கரணத்தினமைந்து முடிந்தகாலை முதல் மூன்றுநாளும் முறையே தண்கதிர்ச் செல்வற்கும், கந்தருவற்கும், அங்கியங்கடவுட்கும் அளித்து நான்காநாள் அங்கியங்கடவுள் தலைமகனுக்களிப்ப அவன் துய்ப்பானாக வென்பது.
உள்ளுறை :- கனி தலைவியாகவும், தும்பி தோழியாகவும், அலவன் தன்மேலே தவறிழைக்குந் தமராகவும், இரைதேர் நாரை தலைவனாகவுங் கொண்டு கனியைத் தும்பி மொய்த்தலும் அலவன் கைப்பற்றி்க் கொள்ள நாரை வரக்கண்டு விட்டது போலத் தலைவியைத் தோழி சார்ந்திருப்பவும், தமர் முதலாயினார் இற்செறிப்பத் தலைவன் வரலும் அவர் மகட் கொடை நேர்ந்து இற்செறிப்பொழித்தா ரென்றதாம். மெய்ப்பாடு - உவகையைக் சார்ந்த பெருமிதம். பயன் - பிரியற்கவெனக் கூறுதல்.
(பெரு - ரை.) இனி, இந்தச் செய்யுளை ஆசிரியர் இளம்பூரண அடிகளார், தலைவன் இற்கிழமையைத் தலைவிமாட்டு வைத்தவிடத்து அவளை மறந்தொழுகினானாக அவளைத் திருத்துதற் பொருட்டுத் தோழி கூறிய கூற்றாகக்கொண்டு "சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும்" (தொல்-கற்- 9) என்னும் துறைக்கு எடுத்துக்காட்டினர்.