பரத்தைமகளிர் தூயராதலின் அங்குச் செல்க வென்பாள், வாலிழை மகளிரென்றாள். அதன் முன் தம் இழிந்த நிலைமை கூறுவாள், புனிறு நாறுமென்றாள். சேரித் தோன்றும் தேரென்றது, தம்மனைக்கண்ணே நிறுத்தாது பரத்தையர் சேரியிலேயே நாளுங்கொண்டு சென்ற அவன் கொடுமை குறித்தவாறு. எழால் வல்லை யென்றது, அதனால் எம்மை வசிக்க இயலாதென்றவாறு. நீடு நிலைப் புரவியென்றது. ஊரன் நெடும் பொழுது அயலில் வந்திருப்பதனை யாம் அறிந்துளேமென்றவாறு.
மெய்ப்பாடு - வெகுளி.
பயன் - வாயின்மறுத்தல்.
(பெரு - ரை.) நின் துறைவன் மாசற்ற அகவழகாகிய அன்பினது மாண்புணரான்காண், அவன் வறிய புறவழகையே காமுறுவோன் ஆதலின் அப்புறவழகு இப்பொழுது எம்பால் இல்லை என்பாள், எம் கலிங்கம் மாசுடைத்து எந்தோளும் புனிறு நாறும் யாம் ஒத்தனெம் அல்லேம் என்றவாறு. 'மெய்யொடு மாசுபட்டன்றே' என்றும் பாடம்.
(380)