பக்கம் எண் :


647


     (சொ - ள்.) எம் நெஞ்சே வாழி - எமது உள்ளமே நீ வாழ்வாயாக!; நாண் விட்டு அருந் துயர் உழந்த காலை மருந்து எனப்படும் - நாணமென்பது குறுக்கே தடுப்பின் அப்பொழுது காம நோயைத் தீர்க்கும் நெறியின்றி அரிய துன்பம் எய்தி யாம் வருந்தியவழி அத் துன்பநோய்க்கு மருந்தெனப்படாது நாணம் விட்டு நெருங்கிய காலத்து அக் காம நோய்க்கு மருந்தெனப்படுகின்ற; மடவோளை - மடப்பத்தையுடைய இவளை; வண் புறப்புறவின் செங்கால் சேவல் களரி ஓங்கிய கவை முள் கள்ளி முளரி அம் குடம்பை - வளவிய புறத்தையும் சிவந்த காலையுடைய புறவின் சேவல் களரியில் உயர்ந்து வளர்ந்து கவையாகிய முள்ளையுடைய கள்ளியின் தலையிலே சுள்ளிகளையடுக்கி அமைத்த குடம்பையின்கண்ணே; ஈன்று இளைப்பட்ட வயவு நடைப் பேடை - பிள்ளைகளை யீன்று அவற்றைக் காவல் செய்யுமாறு பொருந்திய வருந்திய நடையுடைய பேடையாகிய புறவு; உணீஇய - உண்ணும் பொருட்டு; மன்னர் முனை கவர் முது பாழ் உகு நெல் பெறூஉம் மாண் இல்சேய் நாட்டு அதரிடை - வேற்றரசர் படையொடு வந்து பொருது பகைமுனையிலே சென்று எல்லாவற்றையும் கவர்ந்து சென்றொழிந்ததனாலே மாந்தர் யாருமின்றி முதிர்ந்த பாழ் நிலத்திலே தானே விளைந்து உதிர்ந்த நெற்கதிர்களைப் பெற்றுக் கொணர்ந்து கொடுக்காநின்ற மாண்பு சிறிதும் இல்லாத நெடுங்தூரத்திற்கு அப்பாலுள்ள நாட்டுக்குச் செல்லும் நெறியின்கண்; நல் நாள் மலர்ந்த வேங்கைப் பொன் மருள் புதுப்பூ - நல்ல நாட்காலையின் மலர்ந்த வேங்கை மரத்தின் பொன்போன்ற புதிய பூக்கள்; பரந்து அனம் நடக்க யாம் கண்டனம் - உதிர்ந்து பரவிக்கிடப்ப அப் பரப்பின்மீது அன்னப்பறவை நடப்பது போல நடக்க அதனை நாம் நேரே கண்டு மகிழ்ந்தோம்; இனிக் காண் - அவ்வாறே இனி நீயுங் காண்பாயாக! எ - று.

     (வி - ம்.) களரி - பாலையிலுள்ள களர்நிலம். முளரி - சுள்ளி: விறகுமாம். இளைப்படல் - காவற்படல். பரந்து - பரவ எனக் திரிக்க.

     இறைச்சி :- பார்ப்பையீன்று காவலாயுள்ள புறவின்பேடை உண்ணுமாறு அதன் சேவல் முதுபாழில் விளைந்த நெற்கதிரைப் பெற்றுவந்து அளிக்குமென்றது, நெஞ்சமே! இவளைப்பெற்று இல்வயிற் செல்லுகின்ற யாம் ஆண்டு இவள் இல்லறம் நிகழ்த்துமாறு வேற்றுநாட்டுச் சென்று பொருளீட்டிவந்து கொடுத்து ஓம்புகிற்போமென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.

     (பெரு - ரை.) "அரணில் சேய் நாட்டு" என்றும் பாடம்; இதற்கு, 'காவலில்லாத தூரிய நாடு' என்க. இனி இவள் நமக்கு நாணம் விடாமலும் அருந்துயர் உழவாமலும் எப்பொழுதும் நுகரும் அமிழ்தமே ஆவள் என்பது குறிப்பு. நாண் விடுதல் - தன் தகைமைக் கேலாதன செய்தல்.

(384)