10 | நன்பொன் இமைக்கும் நாடனொடு |
| அன்புறு காமம் அமைந்தனம் தொடர்பே. |
(சொ - ள்.) என்னையும் களிற்று முகந் திறந்த விழுத் தொடை கல்லா ஏவல் இளையரொடு - எம் தந்தையானவன் களிற்றியானையின் முகத்தைப் பிளந்த சிறந்த அம்பையுடைய கொலைத் தொழிலன்றிப் பிற கல்லாத ஏவன் மக்களாகிய வீரருடனே; மாவழிப்பட்டு என - விலங்கின்பின் வேட்டைமேற் சென்றதனாலே; சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல் இனிக்காவல் என்றோள் - சிறிய கிளிகள் கொய்தழிக்கின்ற பெரிய கதிர் களையுடைய தினைப்புனம் இனி உன்னாலே காவல் செய்யப்படுவதாக என்றனள்; சிலம்பில் போகிய சிதர் கால் வாரணம் முதைச் சுவல் சேவலொடு கிளைத்த பூழி - அதுமுதலாக நாம் அதன் கண்ணே காவலோம்பி வருங்காலைச் சிலம்பிலே சென்ற கிளைகின்ற கோழி தன் சேவலுடனே பழங் கொல்லையின் மேற்புறத்தைக் கிளைத்த புழுயிடையே; மிகப் பல நல் பொன் இமைக்கும் நாடனொடு - மிகப் பலவாகிய நல் பொன் ஒளிவீசாநின்ற நாடனுடன்; அன்பு உறுகாமம் தொடர்பு அமைந்தனம் - அன்பு மிக்க காமமே தலைக்கீடாக யாம் தொடர்ச்சியுடையேம் ஆயினேம், வேங்கையும் புலி ஈன்றன - அங்ஙனமாகிய தொடர்ச்சி விரைவினீங்குமாறு தினை கொய்யுங்காலம் புலிபோன்ற பள்ளிகளையுடைய மலர் அரும்பி மலர்ந்தன; அருவியும் தேம் படு நெடு வரை மணியின் மானும் - அருவிகளெல்லாம் தேன்மணமிக்க நெடிய மலையிடத்தில் நீலமணி போலத் தெளிவடைந்தன; அன்னையும் அமர்ந்து நோக்கினள் - தினை கொய்யுங் காலமும் மணம்புரியுங் காலமும் ஒருசேர வந்தமை கருதிப் போலும் எம் அன்னை அமர்ந்து நோக்கி நின்றனள்; இனி நமது தொடர்பு யாதாய் முடீயுமோ? அறிகின்றிலேன்! எ - று.
(வி - ம்.) புலி: மலர்க்கு உவமையாகுபெயர். முரணுதல் - மாறு கொண்டழித்தல். சிதர்தல் - கிளைத்தல்.
வேங்கை மலர்ந்தவுடன் தினை கொய்தலும், தலைவியை இல்வயிற் செறித்தலும் வழக்காதலானே தொடர்பற்றுவிட்டதென் றிரங்கினாள். தலைவனைப் பிரிப்பதற்குக் காரணமாயிருத்தலின், அதன் கொடுமை தோன்றப் புலியென்ற பெயராற் கூறினாள்.
இறைச்சி:- கோழி கிளைத்த பூமியிடத்து நன்பொன் இமைக்கு மென்றது, செல்வக் குறைபாடிலனாதலால் எமர்க்கு வேண்டும் பொருள் கொடுத்து என்னை மணம்புரிந்துகொண்டான் இல்லையேயென் றிரங்கியதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) வாரணம் கிளைத்த பூழியில் நன்பொன் இமைக்கும் என்றது நம்மால் வற்புறுத்தப்பட்ட நம் பெருமான் இனி வரைவொடு வந்து நமக்கு அளி செய்வான் என்றவாறாகக் கோடல் இனிது. "காவனீ என்றோளே"