(து - ம்,) என்பது, தலைமகன் விழாக்களத்தின்கண்ணே வரைவின் மகளிர் பலரின் நடுவண் நிற்பப், புதுவதாக மனையோளாதற்குரியாளோர் இளமகள் சுற்றத்தார் கட்டளைப்படி ஆறாடலும், காவிற் பூச் சூடலும் ஆகிய தொழில்களைச் செய்யுமாறு கருதி அவனைக் கொணர வேண்டி, நிரம்பிய கோலத்துடனே அவ்விழாக்களங் குறுகுதலும் அதனையறிந்த காமக்கிழத்தி அப்புதியாளின் பக்கத்தவராய வாயிலாவார் கேட்குமாறு நெருங்கி இப் புதியவளைத் தலைவன் காணின் வரையாதுவிடான்; வரைந்தாலோ பலபல மாதர் தந்தந் நலனிழப்பராதலின் யான் இப்பொழுதே கோலங்கொண்டு சென்று இவள்பால் எய்தாதபடி அவனைக் கைப்பற்றிக்கொள்வேனென வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மறையின் வந்த மனையோள் செய்வினைப் பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்" (தொல். கற். 6) என்னும் விதி கொள்க.
துறை : (2) தலைமகள் தோழிக்குரைப்பாளாய் வாயிலாகப் புக்கார் கேட்பச் சொல்லியதூஉமாம்.
(து - ம்,) என்பது, வெளிப்படை.
(உரை இரண்டற்குமொக்கும்.) (இ - ம்.) இதனை, "வாயிலின் வரும் வகை" (தொல். கற். 6) என்பதனாற் கொள்க.
| வாளை வாளின் பிறழ நாளும் |
| பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் |
| கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த |
| வயல்வெள் ஆம்பல் உருவ நெறித்தழை |
5 | ஐதகல் அல்குல் அணிபெறத் தைஇ |
| விழவிற் செலீஇயர் வேண்டும் மன்னோ |
| யாணர் ஊரன் காணுநன் ஆயின் |
| வரையா மையோ அரிதே வரையின் |
| வரைபோல் யானை வாய்மொழி முடியன் |
10 | வரைவேய் புரையும் நற்றோள் |
| அளிய தோழி தொலையுந பலவே. |