(சொ - ள்.) தோழி வாளை வாளின் பிறழ நாளும் பொய்கை நீர் நாய் வைகு துயில் ஏற்கும் - தோழீ! வாளைமீன்கள் வாள்போலப் பிறழாநிற்ப அவற்றை இரையாக உண்ணக் கருதாது நாள்தோறும் பொய்கையிலுள்ள நீர்நாய் தங்கிய துயிலை ஏற்றுப் பொருந்தாநிற்கும்; கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை - கை வண்மையுடைய கிள்ளிவளவனது கோயில்வெண்ணியைச் சூழ்ந்த வயலிலுள்ள வெளிய ஆம்பலின் அழகிய நெறிப்பையுடைய தழையை; ஐது அகல் அல்குல் அணிபெறத் தைஇ விழவில் செலீஇயர் வேண்டும் மன் - மெல்லிதா யகன்ற அல்குலின் மேலே அழகுபெற உடுத்து யானும் இங்கு நடக்கின்ற விழாக் களத்தின்கண்ணே செல்ல வேண்டும் முன்னமே கருதாமையின் அது வீணே கழிந்தது; யாணர் ஊரன் காணுநன் ஆயின் வரையாமையே அரிது-இப்பொழுது இவ்விளமகள் தோற்றப் பொலிவோடு செல்லுதலைப் புதுவருவாயினையுடைய ஊரன் காண்பானாயின் ஏனையோரை ஏறட்டுப் பாராது இவளையே கொண்டுசெல்லாநிற்கும், அங்ஙனம் கொள்ளாது விடுதலரிதேயாம்; வரையின் வரைபோல் யானை வாய்மொழி முடியன் வரைவேய் புரையும் நல் தோள் - கொண்டு சென்றொழிந்தாலோ வரைபோல்கின்ற யானையும் வாய்மையுமுடைய முடியனது மலையிலுள்ள மூங்கில்போன்ற இவனுக்குரிய இல்லுறை மாதர்களின் நல்ல தோள்கள்; பல தொலையுந அளிய-பல தம் நலனிழப்பனவாகும்! கருதின் அவை இரங்கத்தக்கன: எ - று.
(வி - ம்.) வரைதல் - கொள்ளுதல்.
வரையாமை அரிதென்றதனால், அவளது அழகின்மிகுதி கூறினாள். மாதர்தோள்கள் பல நலனழியுமென்றதனால், தன்னையும் அவன் விரும்பானெனவும் தனது நலனுமழியுமெனவுங் கூறினாளென்பது. அவள் போலத் தான் அழகின்மையால் உடையின் சிறப்பாலேனும் வயமாக்க வெண்ணித் தழை அணிபெற உடுத்தென்றாள். ஐதகலல்கு லென்றதனால், அஃது இயல்பாயமைந்த அழகுடையதென்பது.
உள்ளுறை:- பொய்கையில் வாளைமீன் பிறழ அதனை இரையாகக் கொள்ளக் கருதாது நீர்நாய் துயிலேற்குமென்றது, விழாக்களத்து ஏதில் ஒருத்தி புனைந்து வந்து நிற்ப அவளைக் கடிந்து போக்காது யான் வாளா: மனையகத்திருந்தனென் எனக் காமக்கிழத்தி உள்ளுறை கூறினாளென்றதாம்.
மெய்ப்பாடு -வெகுளி. பயன் -காமக்கிழத்தி இனிவருந் தலைவியைக் கடிதல்.
(பெரு - ரை.) கிள்ளி - ஒரு சோழமன்னன். முடியன் என்றது மலையமான் திருமுடிக் காரியை.
(390)