| வாழைமென் தோடு வார்புறுபு ஊக்கும் |
| நெல்விளை கழனி நேர்கண் செறுவின் |
| அரிவனர் இட்ட சூட்டயல் பெரிய |
| இருஞ்சுவல் வாளை பிறழும் ஊர |
5 | நின்இன்று அமைகுவென் ஆயின் இவண்நின்று |
| இன்னா நோக்கமொடு எவன்பிழைப்பு உண்டோ |
| மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து |
| அறங்கெடல் அறியாது ஆங்குச் சிறந்த |
| கேண்மையொடு அளைஇ நீயே |
10 | கெடுவறி யாய்என் நெஞ்சத் தானே. |
(சொ - ள்.) வாழை மெல் தோடு வார் உறுபு ஊக்கும் - வாழையின் மெல்லிய தாற்றின் நுனியில் நாலும் பூவை நிலத்தினின்று ஓங்கி வளர்ந்துற்று அசையச் செய்கின்ற; நெல்விளை கழனி கண் நேர் செறுவின் - நெற்கதிர் விளையாநின்ற வயலிலே கண்ணுக்கு இனிய சேற்றில்; அரிவனர் இட்ட சூட்டு அயல் - கதிரறுக்கும் மள்ளர் அறுத்துப் போகட்ட அரிச்சூட்டின் பக்கத்தில்; பெரிய இருஞ்சுவல் வாளை பிறழும் ஊர - பெரிய கரிய பிடரையுடைய வாளைமீன் பிறழாநிற்கும் ஊரனே!; நின் இன்று அமைகுவென் ஆயின் - நீயின்றி யான் பொருந்தியிருப்பேனாயின்; இவண் நின்று இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டு - இங்கு நின்று இனிமையைத் தராத நோக்கத்துடனே என்ன பிழைப்புண்டு? யாதுமில்லை!; மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து - ஆதலின் மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து; அறம் கெடல் அறியாது ஆங்கு - அறம் கெடவறியாது நின்று நிலைபெற்றாற் போன்று; நீ சிறந்த கேண்மையொடு அளைஇ என் நெஞ்சத்தான் கெடு அறியாய் - நீதான் சிறந்த நட்புடனே அளாவி என்னெஞ்சினின்று நீங்குந் தன்மையைக் கற்றறிந்தா யல்லை! அதனால் நீ உளனாயிருப்பின் யான் உளனாவேன் காண்!; எ - று.
(வி - ம்.) நேர்கண் செறு - கண்ணுக்கினிய செறு. சுவல் - பிடர். உறுபு ஊக்கும், ஊக்குதல் - அசைத்தல்.
உள்ளுறை:- வாழையினது பூவை அசைக்கின்றனவாகிய வயலில் உண்டாகும் நெற்கதிர்களை மள்ளர்கள் அறுத்துப்போகட்ட அரிச்சூட்டின் அயலின்கண்ணே வாளை பிறழுமென்றது, தலைவியினது நெஞ்சை வருத்துகின்றனவாகிய காதற் பரத்தையின் செய்கைகளை வாயில்கள் அடக்க அவள் நெஞ்சிலே தலைவன் விளங்கலாயினா னென்பதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவனைப் பரத்தை புகழ்தல்.
(400)