பாற் செல்லக்கண்ட பரத்தை தலைவியின் பாங்காயினார் கேட்பத் தனக்கு மகன் பிறந்தானென்னு மகிழ்ச்சியால் ஊரன் கள்வனைப்போல மெல்ல நுமது இல்வயினுற்றான் போலுமென்று நகையாடிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்குப் "பல்வேறு புதல்வர்க்கண்டு நனி யுவப்பினும்" (தொல்-கற்- 10) என்னும் விதி கொள்க.
| நெடுநா வொண்மணி கடிமனை இரட்டக் |
| குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப் |
| பெரும்பாண் காவல் பூண்டென ஒருசார்த் |
| திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப |
5 | வெறியுற விரிந்த அறுவை மெல்லணைப் |
| புனிறுநாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச |
| ஐயவி யணிந்த நெய்யாட் டீரணிப் |
| பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச் |
| சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த |
10 | நள்ளென் கங்குற் கள்வன் போல |
| அகன்துறை யூரனும் வந்தனன் |
| சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே. |
(சொ - ள்.) கடி மனை நெடு நா ஒள் மணி இரட்ட குரை இலைப் போகிய மணல் விரவு பந்தர் - காவலையுடைய மாளிகையிடத்து நெடிய நாவையுடைய ஒள்ளிய மணி ஒலியா நிற்ப ஒலிக்கின்ற தெங்கங் கீற்றான் மிடைந்து புனைந்த மணல் பரப்பிய பந்தரின்கண்ணே; ஒருசார் பெரும்பாண் காவல் பூண்டென திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப - முன்பு பரத்தையிற் சென்ற வழி்ப் பெரிய பாணர் தலைவனைச் சூழ்ந்து காவலை மேற்கொண்டாற் போலத் திருந்திய கலனணிந்த மகளிர் இப்பொழுது நன்னிமித்தமாக நிற்ப; வெறி உற அறுவை விரிந்த மெல் அணைச் செவிலியொடு புனிறு நாறு புதல்வன் துஞ்ச - நறுமணமிக்க விரிப்பு விரித்த மெல்லிய அணையின்மீது செவிலியுடனே ஈன்ற அணுமை விளங்கிய புதல்வன் துயிலா நிற்ப; ஐயவி அணிந்த நெய் ஆட்டு ஈர். அணிப் பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை - வெண்கடுகை யப்பிய எண்ணெய் தேய்த்து ஆடும் நீராட்டினால் ஈரிய அணியையுடைய குளிர்ந்த நெய்பூசிய மிக்க மென்மையாகிய உடம்பினையுடைய அழகு விளங்கிய மனைவிதான்; ஈர் இமை பொருந்த - தன் ஈரிமையும் ஒன்றோடொன்று பொருந்த வுறங்கா நிற்ப; அகன் துறை ஊரனும் சிறந்தோன் பெயரன் பிறந்தமாறு நள் என் கங்குல் கள்வன்போல வந்தனன் - அகன்ற நீர்த்துறையையுடைய வூரனும் சிறந்த தந்தையின்