(து - ம்.) என்பது, பொருள்வயிற் பிரியுந் தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி அவனை நோக்கி "ஐயனே" ! இவள்கிடந்து வருந்தாநிற்ப யாம் பொருள்வயிற்பிரிதும் என்ற நும்மைத் தெருட்டி இளமையதருமையும் அன்பினதகலமுங் காட்டற்கியலுமோ? ஆதலின், நீயிரே பேணற்பாலி ரென மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்குப் "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல்-கற்- 9) என்னும் விதிகொள்க.
| வைகல் தோறும் இன்பமும் இளமையும் |
| எய்கணை நிழலிற் கழியுமிவ் வுலகத்துக் |
| காணீர் என்றலோ அரிதே அதுநனி |
| பேணீர் ஆகுவீர் ஐயவென் தோழி |
5 | பூணணி யாகம் புலம்பப் பாணர் |
| அயிர்ப்புக்கொண் டன்ன கொன்றையந் தீங்கனி |
| பறையறை கடிப்பின் அறையறையாத் துயல்வர |
| வெவ்வளி வழங்கும் வேய்பயில் அழுவத்து |
| எவ்வ மிகூஉம் அருஞ்சுரம் இறந்து |
10 | நன்வாய் அல்லா வாழ்க்கை |
| மன்னாப் பொருட்பிணிப் பிரிதும்யா மெனவே. |