பக்கம் எண் :


82


     (சொ - ள்.) ஐய என் தோழி பூண் அணி ஆகம் புலம்ப - ஐயனே ! என் தோழியின் கலன்களணிந்த மார்பகம் தனியே கிடந்து வருந்தாநிற்ப கொன்றை அம தீம்கனி பாணர் அயிர்ப்புக் கொண்டு அன்ன பறை அறை கடிப்பின அறை அறையாத் துயல்வர-கொன்றையின் இனிய சுவையையுடைய கனிகள் பாணர் ஐயங் கொள்ளும் படியவாய் அவர் தமது பறையை முழக்குங் குறுந்தடி போலப் பாறையில் விழுமாறு கிளைகள் மிகவும் துவண்டாட வெவ்வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து எவ்வம் மிகூஉம் அருஞ்சுரம் இறந்து-கொடிய காற்று வீசாநின்ற மூங்கில் மிக்க இடத்தையுடைய துன்பமிக்குள்ள செல்லுதற்கரிய சுரத்திற்போய்; நன்வாய் அல்லா வாழ்க்கை மன்னாப் பொருள் பிணி யாம் பிரிதும் என - நன்மை வாய்த்தலில்லாத வாழ்விற்குரிய நிலையற்ற பொருளீட்டுதலிற் பிணித்தவுள்ளத்தோடு 'யாம பிரிதும்' என்று நீயிர் கூறுதலானே; இ உலகத்து வைகல் தோறும் எய்கணை நிழலின் இன்பமும் இளமையும் கழியும் காணீர் என்றல் அரிது - இவ்வுலகத்து நாள்தோறும் வில்லினின்று எய்யப்படும் கணை சென்று குறியிலே தைக்கப்படு மளவையின் அக்கணை செல்லும் நிழல் எவ்வண்ணம் விரைவிற் சென்று அழியுமோ அவ்வண்ணம் இன்பமும் இளமையும் கழியாநிற்கும், அவற்றைக் கண்டிலீரோ என்றல் அரிதேயாகும், அவை யாவர்க்கும் தெரிந்திருத்தலாலே; அது நனி பேணீர் ஆகுவீர் - ஆதலின் அந் நிலையாமை யொன்றனையே விரும்பி ஆராய்ந்து அவ்வின்பமும் இளமையுங் கழியுந் துணை இவளைப் பிரியீராய் உறைவீராக !; எ - று.

     (வி - ம்.) புலம்பு - தனிமை, கடிப்பு - குறுந்தடி. மன்னாமை - நிலையாமை.

    இன்பத்தா லிளமை சிறத்தலின் இன்பத்தை முற்கூறினாள். இளமையு மின்பமும் வாளாகழியப் பொருள்வயினுள்ளந்துரப்பலால், நன்வாய் அல்லா வாழ்க்கையென்றாள். இளமையைக் கெடுத்தபின் பொருளாற் பயனில்லையாதலின் மன்னாப்பொருளென் றிகழ்ந்து கூறினாள். கைக்கு வருமின்பத்தை விட்டு நிலையாப் பொருளீட்டுதிரோவென்றாளாமாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.

     (பெரு - ரை.) இனி, இவ்வுலகத்து இன்பமும் இளமையும் கழியும் என்பது காணீர் என்றல் அரிது கண்டு வைத்தும் அவ்வறிவினை நனி பேணீர் ஆகுவீர் அஃதே நுங்குறை என்று கழறினள் என்றலுமாம். இவ்வுரைக்கு என்றல் என்பதனை - கழியும் என்றல் காணீர் என்றல் அரிது என முன்னும் கூட்டிக்கொள்க.

(46)