பக்கம் எண் :


83


     திணை : குறிஞ்சி.

     துறை : இது, சிறைப்புறமாகத் தோழி தலைமகளுக்குரைப்பாளாய்ச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, பிரிந்து நீட்டித்துச் சென்ற தலைவன் மீண்டு வந்து சிறைப்புறத்தானாதலை யறிந்த தோழி, அவன்கேட்டு விரைய வரைந்துகொள்ள வேண்டித் தலைவியை நோக்கி அன்னையெடுத்த 'வெறி நின் பசலையைத் தீர்த்திலதே ! இதனைக் கானக நாடனுக்குச் சொல்லுதுமோ'வென உள்ளுறையால் தாங்கள்படுந் துன்பமுஞ் சேரக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்பதனால், வெறியச்சுறுத்தி வரைவு கடாயது எனக் கொள்க.

    
பெருங்களிறு உழுவை அட்டென இரும்பிடி 
    
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல்செல் லாது 
    
நெய்தற் பாசடை புரையும் அஞ்செவிப் 
    
பைதலங் குழவி தழீஇ ஒய்யென 
5
அரும்புண் ணுறுநரின் வருந்தி வைகுங் 
    
கானக நாடற் கிதுவென யானது 
    
கூறின் எவனோ தோழி வேறுணர்ந்து 
    
அணங்கறி கழங்கிற் கோட்டங் காட்டி 
    
வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து 
10
அன்னை அயரும் முருகுநின் 
    
பொன்னேர் பசலைக் குதவா மாறே. 

     (சொ - ள்.) தோழி வேறு உணர்ந்து அணங்கு அறிகழங்கின் கோட்டம் காட்டி வெறி என உணர்ந்த உள்ளமொடு - தோழீ ! தலைவனைப் பிரிந்ததனாலாகிய நின் மெய்வேறுபாட்டைப் பிறிதொன்றாகக் கருதித் தெய்வத்தான் அறியப்படுகின்ற கழங்கில் அம்மாறுபாட்டைக் காட்டுதலாலே வெறி எடுத்தவழித் தீருமென்றறிந்த வுள்ளத்துடனே, மறி அறுத்து அன்னை அயரும் முருகு - யாட்டை அறுத்து அன்னையால் வணங்கப் படாநின்ற முருகவேள்; நின் பொன் நேர் பசலைக்கு உதவாமாறு - நினது பொன் போன்ற பசலையைப் போக்குதற்குப் பயன்படாமையினாலே; உழுவை பெருங்களிறு அட்டு என இரும்பிடி - புலியானது பெரிய களிற்றியானையைக் கொன்றதேயென்று