(இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை" (தொல்-கற்- 9) என்னும் விதி கொள்க.
| அன்றை யனைய வாகி இன்றுமெம் |
| 1கண்ணுள் போலச் சுழலும் மாதோ |
| புல்லிதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ |
| வைகுறு மீனின் நினையத் தோன்றிப் |
5 | புறவணி கொண்ட பூநாறு கடத்திடைக் |
| கிடினென இடிக்குங் கோற்றொடி மறவர் |
| வடிநவில் அம்பின் வினையர் அஞ்சாது |
| அமரிடை உறுதர நீக்கிநீர் |
| எமரிடை உறுதர ஒளித்த காடே. |
(சொ - ள்.) புல் இதழ்க் கோங்கின் மெல்இதழ் குடைப்பூ வைகுறுமீனின் நினையத்தோன்றி - புல்லிய புறவிதழ்களையுடைய கோங்கினுடைய மெல்லிய இதழ்மிக்க குடைபோன்ற மலர்கள் எல்லாம் வைகறைப் பொழுதிலே விளங்குகின்ற மீன்களாமெனக் கருதும்படி தோன்றா நின்று; புறவு அணிகொண்ட பூநாறு கடத்திடை 'கிடின்' என இடிக்கும் கோல் தொடி மறவர் - காடெங்கும் அழகமைந்த மலர் மணம் வீசும் கன்னெறியிலே 'கிடின்' என்னும் ஓசையுண்டாக மோதாநின்ற அழகிய வீரவளையணிந்த மறவர்; வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது இடைஅமர் உறுதர - கூர்மை பயின்ற அம்பினாற் செய்யுங் கொடுந்தொழிலையுடையராய் அஞ்சாது நும்பால் அமர் செய்ய வந்த பொழுது; நீக்கி எமர் இடை உறுதர நீர் ஒளித்த காடு - அவரை வென்று போக்கி, அப்பால் எம் ஐயன்மார் எங்களைத் தேடிப் பின் தொடர்ந்து வருதலும் அதனை நோக்கிய நீயிர் எம்மைக் கைவிட்டுத் தமியராய்ச் சென்று மறைந்துகொண்ட காடு; அன்றை அனைய ஆகி இன்றும் எம் கண்ணுள போலச் சுழலும் - அற்றைநாளில் அத்தன்மையவாய்த் தோன்றிய அன்றி இற்றைநாளினும் எம் கண்ணெதிரிருத்தல் போலச் சுழலாநிற்கும்; அக்காட்டின்கண் எங்ஙனம் ஏகற்பாலீர் ? எ - று.
(வி - ம்.) புறவு - காடு. வடி - கூர்மை. தொடி - வீரவளை.
ஆறலைகள்வராகிய மறவர் அமரைநீக்கியென்றது அவர் யாதும் தலைவற்குப் பகைமையுடையரல்லராதலின் அவரைக் கொல்லாமல் வென்று நீக்கினமை கூறுவாள் போன்று தலைவனது அருளுடைமை கூறினாள். அத்தகைய அருளுடையீர் நும் வரைப்பினளாய இவளைக் கைவிடற்பாலீரல்லீ ரென்றதாம். மறைந்தமை கூறியது போர் தொடங்கின் எம்பெருமானுக்கு ஏதம் நிகழுமோவெனக் கவன்று தலைவியிறந்துபடுமாதலின், அவள் கவலாதவாறு மறைந்தமை கூறியதாம்.