(து - ம்.) என்பது தலைவன் இரவில்வந்து கூடுதற்கு உடன்பட்ட தோழி, தலைமகளை 'நின் வருத்தந்தீரத் தலைவனூர்க்குப் போய் அவனிடத்து நமது துறையின் தனிமையையும் எமர் அங்குவாராது தாழ்த்ததனையும் கூறினால் குற்றமுளதாமோ' வென உள்ளுறையால் அவள் தலைவனைக் கூடுதற்கு இரவுக்குறி விரும்பும்படி கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "புணர்ச்சி வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.
துறை : (2) சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.
(து - ம்.) என்பது, தலைவன் வந்து ஒரு சிறைப்புறத்தானாக அவன் கேட்டு விரைய வரையுமாற்றானே, தலைவியினாற்றாமைக்கு வியந்து கூறுவாள்போன்று துறை தனிமையுடைத்தென்று அவனூர்க்குச் சென்று கூறியழைத்து வருதுமோவெனக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.
| படுதிரை கொழீஇய பால்நிற எக்கர்த் |
| தொடியோர் மடிந்தெனத் துறைபுலம் பின்றே |
| முடிவலை முகந்த முடங்கிறாப் பாவைப் |
| படுபுள் ஓப்பலிற் பகன்மாய்ந் தன்றே |
5 | கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டமடிந்து |
| எமரும் அல்கினர் ஏமார்ந் தனமெனச் |
| சென்றுநாம் அறியின் எவனோ தோழி |