| மன்றப் புன்னை மாச்சினை நறுவீ |
| முன்றில் தாழையொடு கமழுந் |
10 | தெண்கடற் சேர்ப்பன்வாழ் சிறுநல் லூர்க்கே. |
(சொ - ள்.) தோழி முன்றில் மன்றப் புன்னை மா சினை நறுவீ தாழையொடு கமழும் தெள் கடல் சேர்ப்பன் - தோழீ ! பரதவர் முனறிலின்கணுள்ள பலர் கூடுகின்ற மன்றம் போல் அமைந்த புன்னையின் கரிய கிளைகளிலுள்ள நறிய மலர் அயலிலுள்ள தாழை மடலோடு கூடி நறுமணம் வீசாநிற்கும் தெளிந்த கடற்றுறைவன; வாழ் சிறுநல் ஊர்க்குச் சென்று -வாழ்கின்ற சிறிய நல்ல ஊரின்கட் சென்று; படுதிரை கொழீஇய பால்நிற எக்கர்த் தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்று - அவன்பால் கடலிலுள்ள பெரிய அலைகளாலே கொழிக்கப்பட்ட பால் போலும் வெளிய நிறத்தையுடைய எக்கராகிய மணல் மேட்டில் விளையாட்டயரும் வளையுடைக் கையராய பரத்தியர் யாவரும் தத்தம் மனையகத்துத் துயில்கின்றமையாலே துறை தனிமையுடையதாயிராநின்றது; முடிவலை முகந்த முடங்கு பாவை இறாப் படுபுள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்று - முடியிட்ட வலையால் முகக்கப்பட்ட முடங்குதலையுடைய பாவை போன்ற இறாமீன்களைக் காயவிட்டு அவற்றில் வந்து விழுகின்ற காக்கைகளை ஓப்புதலானே பகற்பொழுது கழிந்துவிட்டது; எமரும் கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து அல்கினர் - எம்முடைய ஐயன்மாரும் திரண்ட கோடுகளையுடைய சுறா முதலிய மீன்களைப் பிடித்தலானாகிய உவகையராய்ப் பின்னும் வேட்டைமேற் செல்லாதொழித்துத் தம்தம் மனையகத்தே தங்கிவிட்டனர்காண்; நாம் ஏமம் ஆர்ந்தனம் என அறியின் எவன் - யாமும் நீ இல்லாமையால் மயக்கமுடையேமாய் இராநின்றேம் என்று கூறி அவன் கருத்தை ஆராய்ந்தறியின்; அதனா லேதேனும் குற்றப்பாடுளதோ? உளதாயிற் கூறிக்காண்; எ - று.
(வி - ம்.) அல்குதல் - தங்குதல். ஏமார்த்தல் - மயங்குதல். மன்றம் - சபை.
இறாமீன் கைமுதலாய உறுப்புக்கள்போலு முள்முதலியவற்றையுடைத்தாகிப் பாவைபோறலிற் பாவையென்றார். 'துறைபுலம்பின்று' என்றதனால் அந்நெறியே வரற்பாலனெனவும், முன்றில் தாழையும் புன்னையுங் கமழுமென்றதனால் நமது முன்றிலின்கணுள்ள தாழை சூழ்ந்த புன்னையின் கீழிடமே கூடுதற்காகுங் குறியிடமெனவும், எமரும் அல்கின ரென்றதனால் தமரால் ஏதநிகழ்த்தப்படானெனவும் தலைவி இரவுக்குறி விருப்பமுறக் கூறினாளாயிற்று.
உள்ளுறை : புன்னை மலர் தாழை மடலோடுசேர மணங்கமழா நிற்குமென்றதனால், நீ தலைவனொடு முன்றிற் சோலையுட்கூடி இன்பந் துய்ப்பாயாக என்றதாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த இளிவரல்.